இந்தியா

30 ஆம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் மோடி

30 ஆம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் மோடி

webteam

மக்களவைத் தேர்தலில் பாரதிய‌ ஜனதா அபார வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து ‌இரண்டாவது முறையாக வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியை சேர்ந்த நபர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்பது இதுவே முதன்முறையாகும். 30ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடியுடனே அவரது அமைச்சரவையும் பதவியேற்கும் எனக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக வரும் 28ஆம் தேதி தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார் மோடி.

இந்நிலையில் டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்க இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்திருக்கிறது. 

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட‌ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்துக்குப் பிறகு யாரெல்லாம் அமைச்சர் பதவி வகிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து பாரதிய‌‌ ஜனதா தலைமை முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே மோடியின் பதவியேற்பு விழாவை அடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இருவரும் டெல்லியில் தங்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.