ஹரியானாவில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தொழுது கொண்டிருந்தவர்களை மிரட்டியதுடன், மசூதியை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் திடீரென்று அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அங்கு தொழுது கொண்டிருந்தவர்களை மிரட்டியதுடன், மசூதியை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குருகிராமில் உள்ள போரா காலன் என்ற பகுதியில் நான்கு முஸ்லீம் குடும்பங்கள் வசித்து வருகிறது. இவர்கள் அந்த பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் சமீபகாலமாக அந்த 4 குடும்பத்தையும் அங்கிருந்து வெளியேற்ற சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தொழுகை நடந்து கொண்டிருக்கையில், திடீரென்று 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று அத்துமீறி மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி மிரட்டல் விடுத்தது. மேலும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் மசூதியை அடித்து சேதப்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் மசூதியின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ராஜேஷ் சவுகான், அனில் படோரியா, சஞ்சய் வியாஸ் உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது கலவரம், மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தல், சட்டவிரோதமாக ஒன்றுகூடல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். வருகின்றனர். இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்கலாமே: "மோடி ஆட்சியில் நாட்டில் வெறுப்பும் பிரிவினைவாதமும் அதிகரித்துவிட்டது" - ராகுல் காந்தி