வானதி சீனிவாசன் pt web
இந்தியா

“மம்தாவின் மௌனத்தை மக்கள் பார்க்கிறார்கள்” - பாஜக பெண் MLA-வின் கார் தாக்கப்பட்டது குறித்து வானதி!

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ-வின் கார் தாக்கப்பட்டது குறித்து வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

மேற்கு வங்கத்தின் பாஜக எம்.எல்.ஏ ஸ்ரீரூப மித்ரா, நேற்று இரவு சிலிகுரியின் மில்கி போலீஸ் அவுட்போஸ்ட் அருகே தனது கார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கார் தாக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், “நேற்றிரவு மானெக் சவுக் தொகுதியில் உள்ள கட்சித் தொண்டர்களின் வீடுகளுக்கு சென்றிருந்தேன். இரவு 10.45 மணியளவில் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். இங்கிலீஸ் பஜார் பகுதியில் காரின் பின்பகுதியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. காரின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து கிடந்தது. நல்லவேலை எனக்கு காயம் ஏற்படவில்லை. எனது பாதுகாவலர் இரண்டு பேரை பிடித்துவிட்டார்.

பைக்கில் அவர்கள் நான்குபேர் இருந்ததாக எனது PSO தெரிவித்தார். அதில் இருவர் தப்பிவிட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிடிபட்டவர்களில் ஒருவது தந்தையும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார். அவரது பெயர் முடாசிர் ரெஹ்மான். சகோதரர் மாவட்ட கவுன்சிலில் உறுப்பினர். அவரது பெயர் ஜூயல் சித்திக் ரெஹ்மான். அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் எங்கள் எம்.எல்.ஏ. ஸ்ரீரூப மித்ரா மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்பது வீண். அதில் மீண்டும் தோல்வியுற்றுள்ளார் அவர். சட்ட ஒழுங்கின் மீதான தனது கட்டுப்பாட்டையும் இழந்துள்ளார். மக்கள் அவரது மௌனத்தை பார்த்துக்கொண்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்பில் அவருக்கு அக்கறை இல்லை” என தெரிவித்துள்ளார்.