இந்தியா

பெயர் குழப்பத்தால் சிறைத்தண்டனை அனுபவித்த அப்பாவி பெண்!

பெயர் குழப்பத்தால் சிறைத்தண்டனை அனுபவித்த அப்பாவி பெண்!

webteam

பெயர் குழப்பம் காரணமாக அப்பாவி பெண் ஒருவர் 3 வருடம் சிறை தண்டனை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாமில், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்று கூறப்பட்டதை அடுத்து, அங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. மேலும் 37 லட்சம் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. இரண்டு லட்சம் பெயர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன.

இதில் சந்தேக நபர்கள், 1971-ஆம் ஆண்டுக்கு முன்பே அங்கு வசித்து வருபவர்கள்தானா என்பதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் இதை விசாரிக்க, வெளி நாட்டுத் தீர்ப்பாயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயம் சந்தேக நபர்களை கைது செய்து தடுப்பு முகாமில் வைத்துள்ளது. சமீபத்தில் கார்கில் போரில் பங்கேற்ற வீரர் ஒருவர் கூட கைது செய்யப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பெயர் குழப்பம் காரணமாக, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக சிறை வைக்கப்பட்ட சம்பவம் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அம்மாநிலத்தின் சிராங்க் மாவட்டத்தில் உள்ள பிஷ்னுபுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுபாலா தாஸ். இவர் வெளிநாட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரை தேடி போலீசார் வந்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். ஆனால், அவருக்குப் பதிலாக மதுபாலா மொண்டல் என்ற பெண்ணை கைது செய்தனர். அவர், தான் இந்திய பிரஜைதான் என்று கண்ணீர் விட்டு கதறியும் கேட்கவில்லை. 

வீட்டு வேலை பார்த்து குடும்பத்தைக் கவனித்து வந்த அந்த பெண்ணுக்கு, தனது மாற்றுத்திறனாளி மகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருந்தது. இதுபற்றி சொல்லியும் போலீசார் கேட்காமல் கைது செய்து கோக்ரஜ்ஹர் தடுப்பு முகாமில் அடைத்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றனர். தொடர் முயற்சிக்குப் பின், அவர் தவறுதலாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தீர்ப்பாயம் முடிவு செய்தது. மூன்று வருட சிறைக்குப் பிறகு அந்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் மற்றும் விசாரணை அதிகாரியின் அலட்சியமே, அப்பாவி பெண் ஒருவரின் 3 ஆண்டு சிறைவாசத்துக்கு காரணம் என்ற தகவல், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த மதுபாலா கூறும்போது, ‘’இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மாற்றுத்திறனாளியான என் மகளுக்கு எப்போதும் உதவி தேவை. இனி நான் அவளைச் சரியாக பார்த்துக்கொள்வேன்’’ என்றார்.