தேடப்பட்டு வரும் தப்லீக் அமைப்பின் தலைவர் இரண்டு ஆடியோ பதிவின் மூலம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் "மார்கஸ் நிஜாமுதீன்" என்ற 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது மக்கள் அதிகம் நிறைந்த ஒரு நெரிசலான பகுதியாகும். இங்கு கடந்த மாதம் நடைபெற்ற மதக் கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அச்செய்தி நாடு முழுவதும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது. வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் மூலம் இந்த நோய்த் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனவே நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் உட்பட இதில் கலந்து கொண்டவர்களைத் தேடும் பணியை காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என முன்பு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இதன் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 9,000 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆபத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் நம்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் புகார் எழுந்தவுடன் இதன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி என்பவர் தலைமறைவானார். மார்ச் 28 அன்று கடைசியாக இவர் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே அவரை தேடும் பணியில் டெல்லி காவல்துறை இறங்கியுள்ளது. 56 வயது மதிக்கத்தக்க மவுலானா சாத், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இவரைத் தேடி டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையின் உத்தரப்பிரதேசத்திலுள்ள முசாபர் நகருக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. இவரது வீட்டுக்கும் காவல்துறையினர் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அது அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் உள்ளது. இந்த நோட்டீசுக்கு அவர் தனது வழக்கறிஞர் மூலம் பதிலளிப்பார் என குடும்பத்தினர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
காணாமல் போன மதகுருவான மவுலானா சாத்தை கண்டுபிடிக்க இதுவரை போலீசார் 14 மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இவர் மீது கொரோனா பரவுவதற்குக் காரணமாக இருந்தது, சமூக விலகலைக் கடைப்பிடிக்கத் தவறியது என காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்தக் கட்டிடத்தை காலி செய்ய காவல்துறை அறிவுறுத்திய இரண்டு அறிவிப்புக்களை அவர் புறக்கணித்ததாகவும் வழக்குப் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான இரண்டு ஆடியோ பதிவுகள் மூலம், மருத்துவரின் ஆலோசனைப்படி டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக இவர் கூறியுள்ளார். மார்கஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட முதல் ஆடியோ பதிவில் மவுலானா சாத், “இறப்பதற்கு ஒரு மசூதி சிறந்த இடம்” என்றும், கொரோனா வைரஸ் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
இரண்டாவது ஆடியோ பதிவில், அவர் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும் தப்லீக் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "சந்தேகத்திற்கு இடமின்றி, உலகில் நடப்பது மனிதக்குலத்தின் குற்றங்களின் விளைவாகும். நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும், அதுதான் கடவுளின் கோபத்தை அமைதிப்படுத்த ஒரே வழி. ஒருவர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். எங்கிருந்தாலும் எங்கள் உறுப்பினர்கள் அவர்கள் நிர்வாகத்தின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்”என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கொண்டு "உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அது இஸ்லாத்திற்கோ அல்லது மதச்சட்டங்களுக்கோ எதிரானதல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார்.