இந்திய விமானப் படையின் ஏஎன்-32 ரக விமானமத்தின் பகுதிகள் அருணாச்சலப் பிரதேசம் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. இதனையடுத்து விமானம் மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு இன்று அந்த விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. அதில், “அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தேடுதல் பணியிலிருந்த எம்.ஐ-17 ரக ஹெலிகாப்படர் கண்டுபிடித்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 8 நாட்களாக இந்த விமானத்தை தேடும் பணியில் 4 எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள், 2 எஸ்.யு-30 எம்.கே.ஐ, 2 சீத்தா ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படையின் பி8ஐ ஈடுபட்டிருந்தன. அருணாச்சலப் பிரதேசத்தில் நிலவிவந்த கடுமையான வானிலை மற்றும் மழையால் இந்த விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அத்துடன் விமானம் விபத்துக்கு உள்ளானால் அவசர சிக்னல் அளிக்கும் பீக்கானும் இந்த விமானத்தில் செயல்படாததால் விமானத்தை கண்டுபிடிப்பத்தில் சிக்கல் இருந்தது. மேலும் இந்த விமான தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு அரசு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது.
ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு கிளம்பிய ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 21 பேரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஏஎன்-32 ரக விமானம் அருணாச்சலப் பிரதேசத்தின் ரின்சி மலைப்பகுதிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.