புதுச்சேரி சிறுமி சடலமாக கண்டெடுப்பு புதிய தலைமுறை
இந்தியா

புதுச்சேரி: 72 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி.. நடந்தது என்ன? முழு விவரம்!

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி 72 மணி நேரத்திற்குப் பிறகு வாய்க்காலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ரஹ்மான்

புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் அந்த சிறுமி தெருவில் தனியாக நடந்து செல்வது மட்டும் பதிவாகி இருந்தது. சிறுமி, முத்தியால்பேட்டை எல்லைப் பகுதியை கடக்கவில்லை என்பதை உறுதி செய்த காவல் துறையினர், வீடு வீடாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிறுமி காணாமல் போன 72 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றைய தினம் அம்பேத்கர்நகர் வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து உடலை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் காவல்துறையினர்.

கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல்

அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில், ஒரு முதியவர் மற்றும் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்யக் கோரி கிழக்குக் கடற்கரைச்சாலை முத்தியால்பேட்டை அருகே 300க்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடந்ததால் அப்பகுதியில் மேலும் பதட்டம் ஏற்படவே தேர்தலுக்காக வந்திருந்த துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டார்கள். மறியலில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து துணை ராணுவப்படையினரை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல் துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு வழி விட்டனர்.

இந்நிலையில் இன்று இருவர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருணாஸ் (19) என்ற இளைஞரும், விவேகானந்தன் (59) என்ற முதியவரும் கைதாகியுள்ளதாக தெரிகிறது. இவர்களில் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடிவந்ததாக சொல்லப்படுகிறது.

இவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், அதில் சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்போதுவரை கடத்தல் வழக்காக இருந்த இந்த வழக்கு, போக்ஸோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது.