மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்பான புத்தகம் ஒன்றை அவரது செயலாளராக இருந்த சக்தி சின்ஹா எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் கார்கில் போர் உள்ளிட்ட சம்பவங்களின் பின்புலம் இடம்பெற்றுள்ளன.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் (1996-97), பின்னர் பிரதமரானபோதும் அவரது தனிச் செயலாளராக (1998-99) பணியாற்றியவர் சக்தி சின்ஹா. இவர் தற்போது, 'வாஜ்பாய்: இந்தியாவை மாற்றிய ஆண்டுகள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் வாஜ்பாயின் 96 வது பிறந்தநாளில் சந்தைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே, இந்தப் புத்தகத்தின் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தப் புத்தகம் தொடர்பாக பேசியுள்ள சக்தி சின்ஹா, ``இன்று அடல் பிஹாரி வாஜ்பாய் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். ஆனால் 1998-ல் அவர் ஒரு அரசை அமைத்து அதை நடத்துவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரியாது. இதுபோன்ற தருணத்திலும், அவர் அணுசக்தி போன்ற முக்கியமான முடிவுகளை எடுத்தார். முரண்பாடாக, பாகிஸ்தானுடன் ஒரு நட்புக்கரம் நீட்டினார். கார்கில் போர் வெடித்தபோது அவர் இந்தியாவை எவ்வளவு உறுதியுடன் பாதுகாத்தார் என்பது அருகில் இருந்த எங்களுக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தப் புத்தகத்தில் கார்கில் போரின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது. ``கார்கில் போர் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் வாஜ்பாய் நவாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசினார். அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் நான்கைந்து முறை உரையாடினார். இந்த உரையாடலின் நோக்கம் கார்கில் போரிலிருந்து எழும் பதற்றத்தை குறைப்பதாகும்.
ஸ்ரீநகருக்கு வந்ததும், நவாஸ் ஷெரீப்புடன் பேச வேண்டும் என வாஜ்பாய் என்னிடம் கேட்டார். நானும் எனது சிறிய அணியும் முயற்சித்தோம், ஆனால் எங்களால் முதலில் முடியவில்லை. ஜம்மு - காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானை (+92) டயல் செய்வது தடைசெய்யப்பட்டதாக அங்கிருந்த உள்ளூர் அதிகாரி ஒருவர் எங்களுக்குத் தெரிவித்தார். இரு பிரதமர்களும் பேசுவதற்காக இந்த வசதியை சிறிது நேரம் திறக்குமாறு தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் கூறப்பட்டது. அதன்பிறகே இருவரும் பேசிக்கொண்டனர்.
ஆனால், இந்தப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி நவாஸ் ஷெரீப்பை ஏமாற்றியதாக நம்பினார் வாஜ்பாய். அதற்கேற்ப போலவே, ஷெரீப்பின் நிலைப்பாடு மிகக் குறைவானது என பின்னாளில் இருவரும் சந்திக்கும்போது தெரியவந்தது. அப்போது, ஷெரீப் சூழ்நிலை கைதியாக இருந்தார் என்பதற்கான அறிகுறியாக இதை எடுத்துக் கொண்டார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கார்கில் போரின் பொது ராணுவ தளபதியாக இருந்தவர் பர்வேஸ் முஷாரஃப் என்பது குறிப்பிடத்தக்கது.