flight PTI
இந்தியா

வெடிகுண்டு மிரட்டல்| 3 நாட்களில் 18 விமானங்கள்.. தந்தையுடன் 17 வயது சிறுவன் கைது!

விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தந்தையுடன் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.

Prakash J

சமீபகாலமாக, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 நாட்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, நேற்று மட்டும் 9 விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன. பின்னர், அனைத்தும் போலி மிரட்டல் எனத் தெரியவந்தது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி 4 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விமானங்கள் மும்பை மற்றும் டெல்லியில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அதிலும் போலி மிரட்டல் எனத் தெரிய வந்தது.

இந்த நிலையில், இன்றும் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி-பெங்களூரு செல்லும் ஆகாசா ஏரின் விமானம் மற்றும் இரண்டு ஸ்பைஸ்ஜெட், மூன்று இண்டிகோ விமானங்களுக்கு இன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவைகளும் சோதனைகுட்படுத்தப்பட்டன. இப்படி, தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களால் பரபரப்பு அதிகரித்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!

சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராஜ்னந்த்கான் பகுதியில் இருந்து 'எக்ஸ்' தளத்தில் மிரட்டல் பதிவு வெளியிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகிய இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் உள்ளனர். விசாரணையில், தன்னிடம் தகராறு செய்த நண்பரின் பெயரில் எக்ஸ் தள ஐடியை உருவாக்கி அதில் இருந்து மிரட்டல் விடுத்ததாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

இதற்கிடையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச்சகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட பல ஏஜென்சிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிக்க: எகிப்து|கிரேட் பிரமிடு உச்சியில் இருந்த நாய்; பாராகிளைடிங்கில் பறந்த நபர் படம்பிடித்த ’வாவ்’ காட்சி!