உ.பி முகநூல்
இந்தியா

உ.பி: 5 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை... அதிகரிக்கும் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள்!

உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுவன் இரண்டு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், குழந்தைகளின் பாதுகாப்பில் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

NCRB 2020 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தமுள்ள குழந்தைகளில் 28.9% பேர் ஏதாவது வகையில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும், இந்த குற்றங்களில் 65% மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

பாலியல் வன்கொடுமை

பெண் குழந்தைகள் மட்டும்தான் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்களா என்றால், நிச்சயம் இல்லை. ஆண் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது உத்தரப்பிரதேசத்தில் நடந்தேறிய சம்பவம் ஒன்று.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் வசிக்கும் 5 வயது சிறுவன் ஒருவனுக்கு, உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதை அவனின் பெற்றோர் கவனித்துள்ளனர். இது குறித்து சிறுவனிடத்தில் பெற்றோர் விசாரணை செய்யவே, அப்போது சிறுவன் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து கூறியிருக்கிறார்.

சம்பவத்தின்படி அர்ஷ் மற்றும் ஜீனை என்ற இரண்டு இளைஞர்கள் சிறுவனை வீட்டிலிருந்து பண்ணை வீட்டிற்கு கடத்தி சென்றதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், இதனை கண்ட ஆடு மேய்ப்பவர்களான ரிஸ்வான் மற்றும் அல்பேஸ் என்ற இரண்டு பேரும் சிறுவனை காப்பாற்றாமல், இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பகிர்ததும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியின் வீட்டிற்கு சென்ற பெற்றோர் இது குறித்து கேட்டதற்கு, ”இதனை வெளியில் கூறினால், குடும்பத்தையே கொலை செய்து விடுவோம்” என்று பெற்றோரையே மிரட்டிய குற்றவாளிகள், சிறுவனின் குடும்பத்தினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், இது குறித்து ஹாபூர் காவல்நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், bns மற்றும் போக்சோ வழக்குகளின் கீழ் குற்றவாளிகளின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவிக்கையில், "சிறுவனின் குடும்பத்தினர் நான்கு பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படி குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது குழந்தைகளின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.