udayanithi pt desk
இந்தியா

“ரயில் விபத்து: தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று” - அமைச்சர் உதயநிதி

“ஒடிசா ரயில் விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு சம்பவம், மத்திய அரசு விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

webteam

ஒடிசா சென்றுவிட்டு நேற்று தமிழ்நாடு திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

“முதல்வரின் உத்தரவின்பேரில் நாங்கள் ஒடிசா சென்றிருந்தோம். நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தோம். அதன் பின் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றோம். இரண்டு இடங்களிலும் தமிழர்கள் இல்லை. அதன் பின் ஒடிசா அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததை அடுத்து தமிழர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

ஒடிசா ரயில் விபத்து

127 தமிழர்கள் முன்பதிவு செய்த நிலையில் 28 பேர் மட்டுமே ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதில், 8 நபர்களை மட்டுமே தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்த நிலையில், தற்போது 2 நபர்களை தொடர்பு கொள்ள முடிந்துள்ளது, மீதமுள்ள 6 நபர்களை மட்டுமே தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுடன் பயணம் செய்த நபர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர் என ரயில்வே காவல்துறை மூலம் தகவல் சொல்லி எங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

நம் அரசு அதிகாரிகள் அங்கு தங்கியுள்ளனர், விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கும் என நம்புகிறோம். தற்போது வரை பேச முடியாத 6 நபர்களையும் தொடர்பு கொண்டு நேரடியாக பேச முடிந்தால், யாரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என உறுதிபடுத்த முடியும். ஒன்றிய அரசு விரைவில் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விபத்தே தவிர்த்து இருக்க வேண்டிய ஒரு விஷயம்.

ஒடிசா ரயில் விபத்து, ரயில் சிக்னல்

ஒடிசா அரசு இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாதிக்கபட்ட இடங்களை நேரடியாக சென்று பார்த்தோம். வேதனையான அனுபவமாக இருந்தது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்து முதல்வர் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பார்” என்றார்.