இந்தியாவின் ஏவுகணை கட்டமைப்பு பாதுகாப்பானதாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்குள் இந்திய ஏவுகணை தவறுதலாக சென்ற விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்தியா தன் வசம் உள்ள ஆயுதங்களை அதிகபட்ச பாதுகாப்புடன் பராமரித்து வருவதாக அதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எனினும் ஏவுகணை தவறுதலாக பாய்ந்த நிகழ்வு குறித்து விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். தேவைப்படுமானால் பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்திய ஏவுகணை தவறுதலாக பாய்ந்தது வருந்தத்தக்க நிகழ்வு என்றும் அதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பது ஆறுதல் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில் பாகிஸ்தானுக்குள் இந்திய ஏவுகணை விழுந்தது ஒரு விபத்துதான் இந்நிகழ்வுக்கு வேறு எந்த காரணமும் இருப்பதற்கான முகாந்திரங்கள் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.