இந்தியா

சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் நாராயண் ராணே நள்ளிரவில் நீதிமன்ற பிணையில் விடுவிப்பு

சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் நாராயண் ராணே நள்ளிரவில் நீதிமன்ற பிணையில் விடுவிப்பு

jagadeesh

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணே, நள்ளிரவில் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில், இந்திய சுதந்திரம் பெற்ற ஆண்டு பற்றி மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை என்றும் அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன் என்றும் மத்திய அமைச்சர் நாராயண் ராணே பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. நாராயண் ராணே மீது மாநிலம் முழுவதும் பல இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் திடீர் திருப்பமாக, ரத்னகிரி காவல் துறையினர் நாராயண் ராணேவை நேற்று திடீரென்று கைது செய்தனர். மும்பையிலிருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகாத் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

மத்திய அமைச்சரிடம் விசாரணை நடத்துவதற்கு, காவல்துறை 7 நாள் அனுமதி கோரிய நிலையில், மறுப்பு தெரிவித்த நீதிபதி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கினார். இதையடுத்து வாய்மையே வெல்லும் என நாராயண் ராணே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நாராயண் ராணேவை கைது செய்தது அரசமைப்பு சட்டத்தை மீறிய செயல் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ள நிலையில், அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஒரு காலத்தில் சிவசேனா கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராணே, பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸிலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய அவர் பின்னர் பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சரானார்.