இந்தியா

காஷ்மீரில் நிலம் வாங்க முற்பட்ட நகைக்கடைக்காரர் சுட்டுக் கொலை?!

காஷ்மீரில் நிலம் வாங்க முற்பட்ட நகைக்கடைக்காரர் சுட்டுக் கொலை?!

webteam

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலம் வாங்க முயன்ற நகைக்கடை அதிபரை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மற்றும் 35A பிரிவை நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. 35A பிரிவின்படி, 'ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் மற்ற மாநில மக்கள் நிலம் வாங்க முடியாது. ஆனால், அவர்கள் எங்கும் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல, காஷ்மீரின் நிரந்தரக் குடியுரிமை பெற்றப் பெண், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தர குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்காது' போன்ற சில சிறப்புகள் இருந்து வந்தன.

கடந்த ஆண்டு இந்தப் பிரிவையே மத்திய அரசு நீக்கி, புதிய நிலச் சட்டத்திருத்த அறிவிப்பை வெளியிட்டது. 'ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மூன்றாம் ஆணை 2020' என்று அழைக்கப்படும் இந்த சட்டத்திருத்தம் மூலம் `இந்தியர்கள் எவரும் ஜம்மு - காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்' என்று அறிவித்தது.

இதற்கிடையே, புத்தாண்டுக்கு முந்தைய நாள் காஷ்மீரின் சாராய் பாலா மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த சில தீவிரவாதிகள் அங்குள்ள நகைக்கடைக்குச் சென்று அதன் ஓனர் சத்பால் நிசால் என்பவரை சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்தனர். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த ஶ்ரீநகர் போலீஸார் கொலைக்கான காரணங்களை தேடி வந்தனர். அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

அதன்படி, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சத்பால் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் என்றாலும், 50 ஆண்டுகளாக காஷ்மீரில் வசித்துவருகிறார். இதற்கிடையே, சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிதாக நிலம் ஒன்றை வாங்க தீர்மானித்த சத்பால், அதற்காக காஷ்மீரின் குடியேற்றச் சான்றிதழ் பெற முயன்றிருக்கிறார். கடந்த வாரம் தான் இவருக்கு குடியேற்றச் சான்றிதழ் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இவரின் கொலைக்கு காஷ்மீரைச் சேர்ந்த The Resistance Front என்கிற அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில், ``காஷ்மீரில் குடியேற்றச் சான்றிதழ் பெற்றிருக்கும் அனைத்து வெளிமாநிலத்தவர்களும் ஆர்எஸ்எஸ் ஏஜென்ட்டுகள். அவர்கள் அனைவரையும் நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். எங்களுக்கு உங்களின் பெயர்களும், நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதும் தெரியும். நாங்கள் உங்களைத் தேடி வருவோம்" என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வெளிப்படையான எச்சரிக்கை காஷ்மீரில் வாழும் மற்ற மாநில மக்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.