ஒரே ஒரு நாள் மட்டும் பயங்கரவாதியாக வாழ்ந்து உயிர்விட்ட உதவி பேராசிரியர் பற்றி உருக்கமான செய்திகள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள பதிகாம் சைன்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நேற்று நடந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர், உதவி பேராசிரியர். கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சுந்தினா பகுதியை சேர்ந்த முகமது ரபி பட் (32) என்பவர்தான் அவர். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காணாமல் போனார்.
இதுதொடர்பாக அவர் குடும்பத்தினர் பல்கலைக்கழகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர் ஹிஜ்புல் முஜாகிதின் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளில் அவரும் ஒருவர் என தெரிய வந்தது.
பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக தனது தந்தையிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார், முகமது ரபி. அப்போது, உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். இதுதான் என் கடைசி அழைப்பு. நான் அல்லாவை சந்திக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். கொல்லப்பட்ட முகமது ரபிக்கு திருமணமாகிவிட்டது. பயங்கரவாத இயக்கத்தில் சேருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கல்லூரியில் பாடம் நடத்தியுள்ளார்.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருக்கும் முடாசிர் ரசூல் மிர் என்பவர் கூறும்போது, ‘இது அதிர்ச்சியாக இருந்தது. ஒருபோதும் பயங்கரவாதக் குழுக்கள் பற்றி எங்களிடம் அவர் விவாதித்ததே இல்லை. அல்லது அது தொடர்பான எந்த அடையாளத்தையும் அவர் காண்பித்ததும் இல்லை’ என்றார். அவரிடம் படித்த மாணவர்களும் முகமது ரபியை புகழ்கின்றனர்.
பயங்கரவாத இயக்கத்தினர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை மூளைச் சலவை செய்து தங்கள் இயக்கத்துக்கு இழுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் காணாமல் போனார். அவரும் ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.