தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிப்பு - தொடரும் விமர்சனங்கள் புதிய தலைமுறை
இந்தியா

மிக்ஜாம் புயல் - தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு... ஆனாலும் தொடரும் விமர்சனங்கள்! ஏன்?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

PT WEB

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இன்று நிதி விடுவித்துள்ளது.

முன்னதாக மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 285 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அதில் 115 கோடியே 49 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதேபோல, வெள்ள பாதிப்பிற்காக 397 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 160 கோடியே 61 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு 276 கோடியே 10 லட்சம் ரூபாயை விடுவித்துள்ளது. மொத்தம் 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேர்தல் நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணமாக 3,498 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி அண்மையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் நடத்திய நிலையில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு குறைவான நிதியும், கர்நாடகத்திற்கு அதிக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதை விமர்சித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.