இந்தியா

‘ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்’ - மே.வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

‘ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்’ - மே.வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

rajakannan

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மேற்குவங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையாளர் ராஜிவ் குமாரை, சிபிஐ அதிகாரிக‌ள் விசாரிக்க சென்ற போது அவர்கள் தடுக்கப்பட்டனர். இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சிபிஐ அமைப்பை பயன்படுத்திக் கொள்வதாக கூறி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தத் தர்ணா போராட்டத்தில் ராஜிவ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியான ராஜிவ் குமார் பங்கேற்றதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டத்தில் பங்கேற்பது பணி விதிகளை மீறிய செயல் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், “ஆணையர் ராஜிவ் குமார் சிபிஐ விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வழக்கில் ஒத்துழைக்க வேண்டும். விசாரணை நடைபெறும் சமயத்தில் ராஜிவ் குமாரை கைது செய்யக் கூடாது. மேற்கொண்டு விசாரணை செய்யும் போது அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.