இந்தியா

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை: அறிக்கை கேட்கிறது உள்துறை அமைச்சகம்

rajakannan

பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை, நேற்று மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். 

இந்த சம்பவம் கர்நாடகா உட்பட தேசிய அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல்கள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.