பருவநிலை மாற்றம் freepik
இந்தியா

2024-ல் காத்திருக்கும் பேராபத்து.. வெளியான புள்ளிவிவரம்!

இந்தியாவில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2-ஆவது முறையாக கடந்த ஆண்டுதான் (2023) வெப்பநிலை அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

2027-ஆம் ஆண்டிற்குள் தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை என்பது 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு உயர 66% சதவீதம் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணம் என்ன?

உலக வெப்பமயமாதல் -

உலக வெப்பமயமாதல்தான் அனைத்துக்கும் காரணம். இந்தியா மட்டுமல்லாது உலகளவில் முக்கிய பிரச்னையாக இருப்பது, உலக வெப்பமயமாதல். இந்தியாவில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2-ஆவது முறையாக கடந்த ஆண்டான 2023-ல்தான் வெப்பநிலை அதிகரித்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2024, அதாவது இந்த வருடமும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2023 காலநிலை மாற்றம்:

பிற ஆண்டுகளின் சராசரி வெப்பநிலையைவிட 2023-ஆம் ஆண்டு வெப்பநிலையானது அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக 2023-ல் மட்டும் 2,376 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் கிட்டத்தட்ட பாதிபேர் இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாது நிலப்பரப்பின் மேலான காற்று வெப்பநிலை 1901-க்கு பிறகு அதிகரித்து காணப்பட்டதும் கடந்த ஆண்டுதான் என்று வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிக அளவு வெப்பம் பதிவான 5 ஆண்டுகள்:

சராசரி வெப்பநிலையை விட அதிக அளவு வெப்பநிலை பதிவான ஆண்டுகள்:

2009 - 0.55 டிகிரி செல்சியஸ்

2010 - 0.53 டிகிரி செல்சியஸ்

2018 - 0.71 டிகிரி செல்சியஸ்

2017 - 0.54 டிகிரி செல்சியஸ்

2023 - 0.65 டிகிரி செல்சியஸ்

இந்த வெப்பநிலை உயர்வு என்பது வரும் காலங்களில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

2015-ஆம் ஆண்டு எல் நினோ ஆண்டாக இருந்ததால், 2016-ஆம் ஆண்டில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பத்தின் அளவு என்பது அதிகரித்து காணப்பட்டது.

எல் நினோ என்றால் என்ன?

எல் நினோ:

பசிபிக் பெருங்கடலில் நிகழும் நிகழ்வான எல் நினோ என்பது பூமத்திய ரேகை மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பமயமாதலுடன் தொடர்புடைய காலநிலை மாற்றம்.

எல் நினோ போன்ற காலநிலை மாற்றத்தால் டெங்கு, ஜிகா, சிக்கன்குனியா போன்ற வைரஸ் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பபுகள் அதிகம். மேலும் விவசாயம் பாதிக்கப்பட்டு, பொருளாதார சிக்கல் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

காத்திருக்கும் பேராபத்து...

2024-ஆம் ஆண்டினை பொறுத்தவரை மே மாதம் வரை எல் நினோ ஆண்டாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தினை உள்வாங்கிய கடல் அதனை வெளியிடும் போது அதிக வெப்பத்தை வெளியிடும். இதனால் இந்திய துணைகண்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

எனவே கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதேதான் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. 2016 ஆம் ஆண்டைவிட 2024ல் வெப்பம் அதிகரிக்க சாத்திய கூறுகள் அதிகம்.

உயரும் வெப்பநிலை - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?

  • 1901-லிருந்து பார்த்தால் 2023ம் ஆண்டுதான் அதிகபட்ச வெப்பம் கொண்ட இரண்டாவது ஆண்டாக கருதப்படுகிறது. பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் அதீத வெப்பநிலை மாற்றம் என்பது 2023-ல் ஏற்பட்டுள்ளது.

  • கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான மழைப்பொழிவும் 2023-ல்தான் பதிவாகியுள்ளது.

  • நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இதேநிலை தொடர்ந்தால் 2050 க்குள் நாட்டின் பாதி மக்கள்தொகையின் வாழ்க்கைத்தரம் சராசரிக்கும் கீழே செல்லக்கூடும். வெப்பநிலை தாக்குதல் அதிகமிருந்தால் விவசாயம் மற்றும் கட்டுமானத்துறை பணிகள் கடுமையாக பாதிக்கும். இந்த இரண்டு துறைகளில்தான் மக்கள் அதிக அளவு பாதிப்படைகின்றனர் என்பதால், ஒட்டுமொத்த பாதிப்பும் உயர்விலேயே இருக்கும்.

  • இதுபோன்ற சூழல்களால், 2030 க்குள் 40 சதவீத வேலை இழப்புகள் இந்தியாவில் ஏற்படலாம்.

  • உலக வங்கி: இந்த பருவநிலை மாறுதல்களின் தாக்கம் என்பது ஏழைகளையே அதிகமாக பாதிக்கும்.

  • தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சீரகத்தின் விலை அதிகரிக்கும்.

இவ்வளவு பிரச்னைகளின் அடிப்படையான உலக வெப்பநிலை அதிகரிப்பிற்கு பல காரணங்களை நாம் கூறலாம்... இருப்பினும் அவற்றில் முக்கியமானவை நெகிழி பயன்பாடு, காடுகளை அழித்தல், மனிதர்களின் பொறுப்பற்ற செயல்கள் போன்றவையே பிரதானம். எந்தளவுக்கு சுற்றுச்சூழல் காக்கிறோமோ, அந்தளவே நமக்கும் நன்மைகள் விளையும்! காப்போம்... உயர்வோம்!