இந்தியா

முழுப்படத்திற்கே தடை விதிக்க வேண்டும்: பத்மாவதியை எதிர்த்து மீண்டும் போராட்டம்

rajakannan

பத்மாவதி படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை மட்டும் நீக்கி விட்டு வெளியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தப் படத்திற்கே தடை விதிக்க வேண்டும் என்று கர்னிசேனா கூறியிருக்கிறது. 

ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க வேண்டியிருந்தது. ஹரியானாவில் குருகிராம் மாவட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்ற கர்னி சேனா அமைப்பின் தலைவர் மஹிபால் சிங் மக்ரனா கூறுகையில், “ஹரியானாவில் பத்மாவதி படத்தை வெளியிட தடை கோரி துணை கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம். 100 சதவீதம் தடை வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பகுதியளவு நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்தார். 

இந்தப் போராட்டங்களை எதிர்த்து திரைப்படத்துறையினர் பத்மாவதிக்கு ஆதரவு தெரிவித்து நாளை 15 நிமிடம் படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கத்தினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்புக்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறை சார்ந்த 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்த அமைப்புகள் சார்பில் பேசிய அசோக் பண்டிட், “நாங்கள் பத்மாவதி படத்திற்கும், இயக்குநர் சஞ்சய் லீலா பஞ்சாலிக்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம். ஏனெனில் படைப்பு சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. சஞ்சய்தான் படத்திற்கு பொறுப்பு. வரலாற்றின் அடிப்படையில் திரைப்படம் எடுப்பது என்பது எளிதான விஷயமல்ல. பத்மாவதி படத்திற்கு ஆதரவாக நாங்கள் 15 நிமிடம் படப்பிடிப்பு உள்ளிட்ட திரைப்பட வேலைகளை நிறுத்த உள்ளோம். மும்பையில் நாளை படப்பிடிப்பு 15 நிமிடங்கள் நிறுத்தப்படும்” என்றார்.