குலாம் நபி ஆசாத், மெஹபூபா முப்தி ட்விட்டர்
இந்தியா

ஜம்மு காஷ்மீர்| ஒரே தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் மோதல்.. சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல் களம்!

மக்களவைத் தேர்தலில் ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத்தும், மெஹபூபா முப்தியும் போட்டியிட இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Prakash J

நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஜனநாயகத் தேர்தல் பெருவிழாவுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை விறுவிறுப்பை எட்டியுள்ளது. அதேநேரத்தில், அடுத்தகட்டத்துக்கான தேர்தல் பணிகளும் சூடுபிடித்து வருகின்றன. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 5 மக்களவைத் தொகுதிகளில் ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில்தான் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி போட்டியிட உள்ள நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் களம் காண்கிறார். தவிர, ஜம்மு - காஷ்மீரில் I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளான காங்கிரஸ், ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி (3 இடங்களில்) ஆகியவை ஜம்மு - காஷ்மீரில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. மேலும், காங்கிரசில் இருந்து பிரிந்துசென்ற குலாம் நபி ஆசாத், ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற கட்சியை நடத்திவருகிறார். இவரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால், இங்கு பல முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய தேசியக் கொடி அவமதிப்பு.. மீண்டும் சர்ச்சை பதிவு.. மன்னிப்பு கோரிய மாலத்தீவு Ex அமைச்சர்!

இந்தத் தொகுதியில் தமது கட்சிக்குப் பரவலான செல்வாக்கு இருப்பதாக நம்பி களத்தில் குதித்துள்ளார், மெஹபூபா. இவர், அனந்த்நாக்கில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியைச் சேர்ந்தவர். அதனால்தான் அவரது கட்சியின் கோட்டையாக இப்பகுதி விளங்குவதாகச் சொல்லப்படுகிறது. தவிர, அவர் இதற்குமுன்பு 2004 மற்றும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த நிலையில்தான், அவரை எதிர்த்து குலாம் நபி ஆசாத் களமிறங்கி உள்ளார். அதேநேரத்தில், இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனால், இந்தத் தொகுதியில் மட்டும் பலமான மோதல் தொடங்கியுள்ளது. இன்னும் இங்கு பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை. இந்தத் தொகுதியில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு, மே 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க: இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி? சீனா போடும் திட்டம்.. மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை!