இந்தியா

இணைய இதயங்களை வென்ற விவசாயிகள் - மாடுகளுடன் கிகி நடனமாடி அசத்தல்

இணைய இதயங்களை வென்ற விவசாயிகள் - மாடுகளுடன் கிகி நடனமாடி அசத்தல்

webteam

கனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை அண்மையில் வெளியிட்டார். இந்த பாடல் தொகுப்பில் அடங்கிய இன் மை பீலிங்ஸ் என்ற பாடலில் இடம்பெற்றுள்ள கிகி ஐ லவ்யூ என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்பதுதான் கிகி சவால்.

இந்த மோகம் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. பிரபல நடிகை ரெஜினாவும் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோ‌வை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த விவசாயிகள் வித்தியாசமான முறையில் கிகி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு மாடுகள் உழுவதற்கு தயாராக உள்ள நிலையில் இருக்கிறது. லம்பாடிபள்ளி பகுதியைச் சேர்ந்த அனில் கீலா மற்றும் பிள்ளை திருப்பதி ஆகிய இரண்டு இளம் விவசாயிகள் அந்த மாடுகளை லேசாக தட்டிவிட அவை உழத் தொடங்குகின்றன. மாடுகள் உழும் போதே அந்த இரண்டு விவசாயிகளும் அதன் கூட கிகி நடனமாடுகிறார்கள். அவர்கள் நடனமாடும் போது ஆடைகள் முழுவதும் சேர் ஆகிறது. இறுதியில் தனது வேஷ்டியையும் கழட்டி ஒரு விவசாயி நடனமாடுகிறார். சேரும், சகதியுமாக உள்ள நிலத்தில் அவர்கள் வித்தியாசமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 38 நொடிகள் கொண்டது இந்த வீடியோ. 

சவாலை ஏற்றது எப்படி?

24 வயதான அனில் தெலுங்கானாவின் சித்திபெட் மாவட்டத்தில் உள்ள தர்காபள்ளி பகுதியைச் சேர்ந்தவர். இவர், தர்காபள்ளியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். பின்னர் அங்கிருந்து பிள்ளை திருப்பதி உள்ள லம்பாடிபிள்ளை ஊருக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு, ஸ்ரீகாந்த் என்பவருடன் ‘மை வில்லேஜ் ஷோ’ என்ற நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டதன் பேரில் அனில், பிள்ளை திருப்பதி ஆகிய இருவரும் கிகி சவாலை ஏற்றனர். தங்களது வீடியோவை ஸ்ரீகாந்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் பக்கங்களில் தான் பதிவிட்டுள்ளனர். 

இந்த சவால் குறித்து நியூஸ் மினிட் நிறுவனத்திடம் அனில் கூறுகையில், ‘கிராமத்தில் இருந்து கிகி சவாலை செய்ய வேண்டும் என ஸ்ரீகாந்த் தான் யோசனை கூறினார். இருப்பினும், முழுவதையும் நாங்கள் தான் திட்டமிட்டோம். போலீசாரின் எச்சரிக்கையும் நாங்கள் கவனித்து வந்தோம். இதுஒரு ஆபத்தான ஸ்டண்ட் என்று ஒவ்வொருவரும் கூறினார்கள். ஆனால், இது ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சி என்று காட்ட விரும்பினோம். அதேபோல், ஆபத்தான வழியில் செய்ய தேவையில்லை என்பதையும் காட்ட விரும்பினோம். 2-3 வழிகளில் இதனை செய்ய நினைத்தோம். பின்னர் கடைசியாக இந்த ஐடியாவை முடிவு செய்தோம்’ என்றார். 

பாப் கலாச்சாரத்தில் இந்திய கிராமம்

உங்கள் வீடியோ பிரபலமாகும் என்று நினைத்தீர்களா என்ற கேள்விக்கு, ‘மக்கள் இந்த வீடியோவை விரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. நிறைய பேர் தங்களுடைய வலைதளத்தில் இந்த வீடியோவை பதிவிடுகிறார்கள். எங்களுக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய பேர் விவசாயிகளையும், அவர்களது வாழ்க்கை முறையையும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்’ என்றார் அனில்.

மேலும் அனில் கூறுகையில், ‘சேரும், சகதியும் உள்ள நிலத்தில் நடனமாடும் போது நாங்கள் விழுந்து, விழுந்து எழுந்தோம். அதனால், வீடியோ எடுப்பதற்கு முன்பு இரண்டு, மூன்று முறை திட்டமிட்டு முயற்சித்தோம். எனவே, வீடியோ பதிவை ஓரே ஷாட்டில் முடித்துவிட்டோம்’ என்றார்.

எல்லோரும் காரில் இருந்து இறங்கி நடனமாடிய நிலையில், ஒரு பாப் கலாச்சாரத்தை இந்திய கிராமத்தில் பின்னணியில் இளம் விவசாயிகள் செய்துகாட்டியது நெட்டிசன்களை கவர்ந்துவிட்டது.