குரங்கு ஒன்று தினந்தோறும் பள்ளி வகுப்பறைக்கு வந்து மாணவர்களைப் போலவே அமைதியாக பாடம் கவனிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீப்புள்ளி மண்டலத்தின் வெங்கலம்பள்ளியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு கடந்த 12 நாட்களாக ஒரு விஐபி ஒருவர் வருகை புரிந்து வருகிறார். அவர் விஐபி மாவட்ட கல்வி அலுவலரோ அல்லது பள்ளி ஆய்வாளரோ அல்ல. சாதாரண ஒரு நீண்டவால் குரங்கு.
பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது, சாம்பல் நிறமுடைய நீண்ட வால் குரங்கு ஒன்று மாணவர்களுடன் சேர்ந்து வகுப்புகளில் வந்து அமர்ந்து பாடத்தை கவனித்து வருகிறது. ஆரம்பத்தில் குரங்கை விரட்டிய மாணவர்களும் ஆசிரியர்களும் பின்னர் அதன் வருகையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அதனால் இக்குரங்கு பள்ளிக்கு தொடர்ந்து வருகிறது. மாணவர்களுடன் அமர்ந்து அவர்கள் பாடம் படிப்பதையும் உற்று கவனித்து வந்துள்ளது. போகப்போக அந்தக்குரங்கு அந்தப்பள்ளியின் மாணவி போலவே மாறியுள்ளது. தினமும் பள்ளிக்கு வருவதும், அமைதியாக மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கேட்பது போன்ற செயலில் குரங்கு ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அப்துல் லத்தீப் கூறுகையில், “மாணவர்கள் அந்தக் குரங்குக்கு லட்சுமி என்று பெயர் வைத்துள்ளனர். குரங்குகளின் இயல்புக்கே உண்டான நடத்தைகளிலிருந்து இந்தக் குரங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது. மாணவர்களைப் போல ஒழுக்கம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகிய பள்ளி விதிகளை அந்தக் குரங்கு பின்பற்றுகிறது.
காலையில் பள்ளி பிரார்த்தனைகளிலும் கலந்துகொள்வதோடு வகுப்புகளிலும் கலந்துக்கொள்கிறது. வகுப்புகளுக்குப் பின்னர், மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறது.
அது பள்ளிக்கு வருவது நல்ல நிகழ்வாக இருந்தாலும், அதனால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. எனவே குரங்கு வகுப்புக்குள் வராமல் இருக்க வகுப்பு தொடங்கும் முன் ஆசிரியர்கள் கதவை மூடிவிட்டு பாடம் எடுக்கத் தொடங்கி உள்ளனர்.
ஆனால் லட்சுமி ஆர்வம் காரணமாக ஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்த்து வகுப்பை கவனிக்க ஆரம்பித்தது. இது அனைத்து ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. இரண்டு நாட்களுக்குமுன் குரங்குக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக ஒரு கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தோம். உடல் நலம் சரியானதும் மீண்டும் பள்ளிக்குத் திரும்பியது. இப்போது லட்சுமி பழங்களை மட்டும் உணவாக எடுத்துக்கொள்கிறது” எனத் தெரிவித்தார்.