Meenakshi Lekhi Twitter
இந்தியா

“அமைதியாக இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு ED வரும்”- நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு

'அமைதியாக இல்லாவிட்டால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத் துறை வரும்' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டும் தொனியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Justindurai S

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. மாநில அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே மத்திய அரசின் இந்த புதிய மசோதாவை ஆதரித்து கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனால் கோபமடைந்த அவர், “அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும்” என எச்சரித்தார். மேலும் அவர், ''சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஏறக்குறைய பாதி அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதால், நான் அவரை (அரவிந்த் கெஜ்ரிவால்) 1/4வது முதல்வர் என்றே சொல்வேன்'' என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை குறிப்பிடாமல், “ஒரு சாதாரண மனிதனாக அடையாளம் காணப்பட்ட ஒருவர் எப்படி கண்ணாடி அரண்மனையின் இளவரசராக முடியும்” என்று சாடினார். கெஜ்ரிவாலின் பங்களா ரூ.40 செலவில் புதுப்பிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் மீனாட்சி லேகி இவ்வாறு தாக்கிப் பேசினார்.

தொடர்ந்துப் பேசிய அமைச்சர் மீனாட்சி லேகி, ''சஃப்தர்ஜங், லேடி ஹார்டிங் மற்றும் லேடி இர்வின் மற்றும் எய்ம்ஸ் உட்பட அனைத்து மருத்துவமனைகளின் நிர்வாகத்தையும் மத்திய அரசு மேற்பார்வையிடுகிறது. ஜி20 கூட்டத்திற்கு முன்னதாகவே சாலைகளை மேம்படுத்த டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்காக பணம் செலவழிக்க மாட்டோம் என்றனர். அதேநேரம் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து 700 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இப்போது நீங்கள் கேட்கின்றீர்கள் ‘டெல்லி அரசின் ஆட்சியில் மத்திய அரசு எவ்வாறு தலையிட முடியும்?’ என்று!" என்றார்.

அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், 'அமைதியாக இல்லாவிட்டால் வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்துவிடும்' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டும் தொனியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.