இந்தியா

''மகாபாரதத்தில் கூட இப்படித்தான்'' - அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத்

''மகாபாரதத்தில் கூட இப்படித்தான்'' - அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத்

webteam

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்களின் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடையும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதன் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நி‌ர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி  உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வ‌ழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது

5 மாதங்களாக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மத்தியஸ்தர்கள் குழு அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை எனவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணமுடியவில்லை எனவும் கைவிரித்தனர். இதனையடுத்து அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசிய உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடையும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், ''அயோத்தி பிரச்னையில் குழு அமைக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நல்ல திட்டம். ஆனால் இந்த பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடையும் என்பது முன் கூட்டியே எதிர்பார்த்தது தான். மகாபாரதத்தில் கூட போருக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதுவும் தோல்விலேயே முடிந்தது. அது பயன் அளிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.