இந்தியா

கோயிலுக்குள் இறைச்சியை வீசிய மர்ம நபர்கள் - கடைகளுக்கு தீ வைப்பு; பதற்றம்

கோயிலுக்குள் இறைச்சியை வீசிய மர்ம நபர்கள் - கடைகளுக்கு தீ வைப்பு; பதற்றம்

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரபிரதேசத்தில் கோயில் வளாகத்துக்குள் மர்ம நபர்கள் இறைச்சியை வீசி சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த இறைச்சிக் கடைகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் ரசூலாபாத் கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இதனிடையே, பூஜைகள் நிறைவடைந்த பிறகு நேற்று முன்தினம் இரவு கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அப்போது கோயில் வளாகத்தில் இறைச்சித் துண்டுகள் வீசப்பட்டு கிடப்பதை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோயில் பூசாரி ஜக்தீஷ் ஜாதவ், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், அப்பகுதி மக்களிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்ட பிறகு போலீஸார் அங்கிருந்து சென்றனர்.

இந்த சூழலில், காலை 11 மணிக்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதிக்கு வந்து கோயிலுக்கு இறைச்சித் துண்டுகள் வீசப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 5-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு அவர்கள் தீ வைத்தனர். இதனால் இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு உடனடியாக வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயிலுக்கு இறைச்சியை வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததை தொடர்நது, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்க்க அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.