இந்தியா

தேசத்திற்காக போராடுங்கள், மாட்டிற்காக போராடாதீர்கள்

தேசத்திற்காக போராடுங்கள், மாட்டிற்காக போராடாதீர்கள்

Rasus

உத்தரப்பிரதேசத்தில் இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இறைச்சி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தேசத்திற்காக போராடுங்கள் மாட்டிற்காக போராடாதீர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

உத்தரபிரதேச முதலமைச்சராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு, சட்ட விரோத மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட இறைச்சி கூடங்களை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த இறைச்சி கூடங்களை மூடுவது பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதி. இதன்பிறகு, மாநிலம் முழுவதும் பல இறைச்சி கூடங்கள் மூடப்பட்டு, 50 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக இறைச்சி கடத்துபவர்களின் பெயர்கள் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு, கடத்தல்காரர்களைப் பிடிக்க, உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது அனுமதி பெற்று நடத்தப்படும் இறைச்சி கூடங்களும் அச்சுறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. சில கூடங்கள் இந்துத்துவ ஆர்வலர்களால் தீ வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

ஆதிய்நாத் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் விலை குறைவான எருமை மாட்டு கறிக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எருமை மாட்டு கறி கிடைக்காததால் அடித்தட்டு மக்களுக்கு புரத சத்து கிடைக்காது.

நிறைய ஹோட்டல்களிலும் சிக்கன் மற்றும் மட்டன் உணவுகள் கிடைப்பதில்லை. ஹோட்டல்கள் டெல்லியிலிருந்து இறைச்சி பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் இதனால் விலை அதிகரிக்கும் எனவும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தர பிரதேச அமைச்சர் எஸ்.என்.சிங், சட்ட விரோத இறைச்சி கூடங்கள் மட்டுமே மூடப்படுவதாக தெரிவித்தார். இவைகளை மூடச் சொல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்ட விரோத இறைச்சி கூடங்களால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை மற்றும் சிக்கன் கடைகள் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் உண்மையல்ல எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

இறைச்சி கடைக்காரர்களின் சின்ன சின்ன போராட்டங்கள் இப்போது மாநில அளவிலான போராட்டமாக உருவெடுத்துள்ளது. மீன் விற்பனையாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இதனால் கடும் இறைச்சி தட்டுப்பாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது உத்தரபிரதேசம்.