ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் பதிவுகளால் டெல்லியில் நடைபெறும் போராட்டம் சர்வதேச அளவில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
சர்வதேச பிரபலங்களின் கவனம் விவசாயிகளின் போராட்டம் பக்கம் திரும்பவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இதை எதிர்க்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு தொடர்ந்து அவர்களுடன் அரசு உரையாடி வருகிறது.
இதுவரை போராட்டம் நடத்தும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சட்டங்களை நிறுத்திவைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமரே தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார். ஆனால், சிலர் தவறான உள்நோக்கத்துடன் இந்தப் போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்தவும், அவர்களை திசைதிருப்பவும் முயல்கின்றனர்.
கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் தலைநகரில் நடந்த வன்முறை கூட இதன் காரணமாகவே நடந்தது. இந்தப் போராட்டங்களை இந்தியாவின் ஜனநாயக பண்பாகவே உலகம் பார்க்கவேண்டும். அரசும், விவசாயிகளும் நிச்சயம் இதற்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, இந்தப் பிரச்னைகள் குறித்து புரிந்துகொண்டு சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பிரபலங்களால் போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல" எனத் தெரிவித்துள்ளது.