entrance exam pt web
இந்தியா

நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த கொல்கத்தா மாணவி, உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்!

எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

இப்சிதா கோஷ் என்ற மாணவி தென்கிழக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வுக்காக கடந்த 8 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி வாடகைக்கு தங்கி இருந்த அறையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தில்ஜாலா நகர காவல் அதிகாரி கூறுகையில், “போட்டி நிறைந்த சூழல் மாணவியின் மனநிலையை பாதித்திருக்கலாம். நம்பும்படியான நண்பர்கள் கிடைக்காததால் தனிமையாக உணர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது” என தெரிவித்துள்ளார். தனது முடிவிற்கு யாரும் காரணம் இல்லை என்று மாணவி குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், “தேவைப்பட்டால் மாணவியின் தொலைபேசி அழைப்புகளையும் பதவிகளையும் ஆய்வு செய்வோம். அவர் பயிற்சி பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் அழுத்தத்தில் இருந்தாரா என்பது குறித்தும் உறுதிப்படுத்த வேண்டும், மாணவி தங்கி இருந்த விடுதியின் உரிமையாளரிடமும் இது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவுகள் வெளியான பின், விசாரணையை மேலும் துரிதப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.