உத்தரபிரதேசத்தில் விவசாய வங்கிக் கடன் தொகையில் இருந்து 1 பைசா மட்டும் தள்ளுபடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த
தேர்தலில் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த 2016 மார்ச் 31-க்கு முன்பு வரை
விவசாயிகள் பெற்றிருந்த ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஆதித்யநாத் அறிவித்தார். இதன் முதற்கட்டமாக, 11.93
லட்சம் விவசாயிகளின் ரூ.7,371 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், தற்போது உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் விவசாயி வாங்கிய ரூ. 1,55,000 கடன் தொகையில் இருந்து 1 பைசா மட்டும் அரசு தள்ளுபடி
செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, விவசாயிகளின் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதி வருவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அரசு
அறிவித்தபடி முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.