குஜராத் முகநூல்
இந்தியா

குஜராத்: கணக்கு டீச்சருக்கே கணக்கு சரியா வரலை? விடைத்தாள் திருத்தும்போது 30 மார்க்கை தவறவிட்ட அவலம்!

குஜராத் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியின்போது, ஆசிரியரின் கவனக்குறைவால் மாணவர் ஒருவருக்கு 30 மதிப்பெண்கள் தவறவிடப்பட்டுள்ளன. இதனால் அம்மாணவர் தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

குஜராத் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியின்போது, ஆசிரியரின் கவனக்குறைவால் மாணவர் ஒருவருக்கு 30 மதிப்பெண்கள் தவறவிடப்பட்டுள்ளன. இதனால் அம்மாணவர் தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. என்ன நடந்தது? முழுமையாக பார்க்கலாம்...

குஜராத் மாநிலத்தில் 10 வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தேர்வில் தோல்வி அடையவே, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது, விடைத்தாள் மதிப்பெண்ணை மீண்டும் கூட்டும்போது ஆசிரியர் கவனக்குறைவாக 30 மதிப்பெண்களை தவறவிட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. இதை செய்ததே ஒரு கணித ஆசிரியர் என்பதுதான் இன்னும் வேதனைக்குரிய விஷயம்.

தேர்வுத்தாளை முதன்முறை அந்த ஆசிரியர் மதிப்பீடு செய்தபோது, கூட்டல் கணக்கில் சொதப்பி... இரு இலக்க எண்ணில் மீதமுள்ள எண்ணை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல ஆசிரியர் தவறியது தெரியவந்துள்ளது. இது சாம்பிள் சம்பவம்தான்.

ஆம், இதுபோல பல ஆசிரியர்கள் செய்த பல்வேறு தவறுகளை குஜராத் மாநில கல்வி வாரியம் கண்டறிந்துள்ளது. பல ஆசிரியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டிருப்பது, அம்மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மதிப்பெண்கள் கூட்டலின் போது தவறு செய்ததற்காக மொத்தம் 4,488 ஆசிரியர்களுக்கு குஜராத் மாநில கல்வி வாரியம் ரூ. 64 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலின்போது இந்த தவறை செய்தவர்களில் அதிகமானோர் கணித ஆசிரியர்கள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

இதுகுறித்து கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவறுதலாக விடப்படும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டுள்ளது. அந்தவகையில்,

  • 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த 1,654 ஆசிரியர்களுக்கு ரூ.20 லட்சமும்,

  • 11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த 1,404 ஆசிரியர்களுக்கு ரூ 24.310 லட்சமும்,

  • அறிவியல் பாடப்பிரிவில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த 1,430 ஆசிரியர்களுக்கு ரூ.19.66 லட்சமும்

அபராதம் விதிக்கபட்டுள்ளது.

இந்த அபராதம் இனிமேல் ஆசிரியர்களை கவனமுடன் வைத்திருக்குமென்று குஜராத் மாநில கல்வி வாரிய துணைத்தலைவர் தினேஷ் படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சிறு அலட்சியம் கூட மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். அப்படியிருக்க, ஆசிரியர்கள் இப்படி கவனமின்றி செயல்படுவது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் இனியாவது மிகுந்த கவனத்தோடு பணிசெய்ய வேண்டும் என்பதற்காக அபராதம் என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், ஆசிரியர்களின் கவனக்குறைவு தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.