இந்தியா

ரயில்களில் மசாஜ் நிலையமா? - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு

ரயில்களில் மசாஜ் நிலையமா? - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு

webteam

ரயில்களில் மசாஜ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு பாரதிய ஜனதா எம்பி ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக, இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. 

தலை, கால்களில் மசாஜ் செய்வதற்கு ரூ.100 முதல் ரூ. 300 வரை கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 3 முதல் 5 மசாஜ் செய்பவர்கள் பயணம் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் பயணிகள் பயன் பெறுவதோடு, ரயில்வே துறைக்கும் ஆண்டிற்கு கூடுதலாக ரூ.90 லட்சம் வருவாய் கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று ரயில்வே வாரியத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த முடிவு இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என இந்தூர் தொகுதி பாரதிய ஜனதா எம்பி ஷங்கர் லால்வானி, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ரயில்களில் பெண்களும் பயணிக்கும் போது அவர்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படும் என்பதால் மசாஜ் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என எம்பி ஷங்கர் லால்வானி குறிப்பிட்டுள்ளார். மேலும் “சுற்றுலா பயணிகளுக்காக வழங்கப்படும் இந்தச் சேவையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பயணிகளுக்கான ரயிலில் மசாஜ் நிலையம் எதற்கு? அங்கு யாருக்கு தேவைப்பட போகிறது. அவர்கள் அதிகபட்சம் 3 லிருந்து 4 மணிநேரம் பயணம் செய்வார்கள். இது முற்றிலும் தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன். மேலும் இங்கு பல பெண்கள் குழுக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.