இந்தியா

இங்கே எல்லாம் மாறிப்போச்சு.. இப்படியும் ஒரு போட்டோ ஷூட்..!

இங்கே எல்லாம் மாறிப்போச்சு.. இப்படியும் ஒரு போட்டோ ஷூட்..!

webteam

புகைப்படங்கள்.. நினைவுகளை நினைவூட்டும் மிகப் பெரிய பொக்கிஷம். பொதுவாக இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்கிறோம். ஆனால் அந்த காலத்தில் அப்படியல்ல.. பள்ளி காலங்களில் எடுக்கப்பட்ட ஒரு க்ரூப் புகைப்படம்தான் அனைவரின் மனதிலும் நிழலாடும். பெற்றோர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் திருமண புகைப்படங்கள். அதுவும் 1970-க்கு முன்னர் திருமணமானவர்கள் பெரும்பாலானோருக்கு திருமணப் புகைப்படமும் இருக்காது. ஆனால் 1990 களில் பொதுவாக திருமண வீடுகளில் எல்லோரும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். அதுவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பிரிண்ட் போட்டு வருவதை காண பல நாட்கள் காத்திருக்க வேண்டும். அருவி அருகே மணப்பெண்களை காமிப்பது, இயற்கை அருகே திருமண ஜோடிகள் நிற்பது போன்ற புகைப்படங்கள் அந்த காலத்தில் பிரபலமாக இருந்தது.

தற்போதோ அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன். ஒருசில நிமிடத்தில் அடுக்கடுக்கான போட்டோக்களை எடுத்து குவித்து விடுகின்றனர். எனவே திருமண நாட்களில் மற்ற நாட்களை காட்டிலும் சற்று வித்தியாசமாக போட்டோ எடுக்க பலரும் ஆசைப்படுகின்றனர். இதற்காக நிறைய மெனக்கெடலும் நடைபெறுகின்றன.

அதன்படி திருமண போட்டோ ஷூட்டிற்காக அவர்கள் பல இடங்களுக்கு சென்று லோக்கேஷனை தேர்வு செய்கின்றனர். அதன்பின் வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் முதலில் தேர்வு செய்வது இயற்கை சார்ந்த இடங்களை.. அப்படி இல்லையென்றால் கடல் சார்ந்த இடங்கள்.. கடலில் இருந்து ஓடிவருவது போன்று, மனைவியை அலேக்காக தூக்கிக் கொண்டு காதலை சொல்வது போன்று பல புகைப்படங்கள் நம் கண்களை கடந்து சென்றிருக்கும். அதேபோல மகப்பேறு நேரத்திலும் போட்டோ ஷூட் நடைபெறுகிறது. மனைவியின் வயிற்றில் முத்தம் கொடுக்கும்படியும், அன்பை வெளிக்காட்டும் விதமாக கைகளை இதயம்போன்று குவித்தும் அவர்கள் புகைப்படங்களை எடுக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு திருமணத்திற்கான போட்டோ ஷூட் இணையத்தில் வைரலானது. பலரும் அதனை பார்த்திருக்கக் கூடும். அதாவது புகைப்படக்காரர் மரத்தின் மேல், தலைகீழாக தொங்கி நின்று புகைப்படம் எடுப்பார். அந்த அளவிற்கு தனது புகைப்படத்தை சிறப்பாக காட்ட அவர் சிரமப்பட்டிருப்பார். இந்த புகைப்படம் பலராலும் பேசப்பட்டது. இந்நிலையில் கோட்டயத்தில் நடைபெற்ற ஒரு திருமண போட்டோ ஷுட் மற்றவர்களை விட சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.

கோட்டயத்தை சேர்ந்த புகைப்படக்காரர் அர்ஜூன் தாமஸ், திருமண போட்டோ ஷூட்டிற்காக நிறைய இடங்களை தேடி அலையவில்லை. அவர் தேர்வு செய்த இடம் கேரளாவின் அரசுப் பேருந்து மற்றும் அதன் பேருந்து நிலையம்தான். தம்பதிகளான ஜேம்ஸ், மற்றும் திஷாவின் போட்டோ ஷூட்டை மிக அருமையாக பேருந்து நிலையத்திற்குள் முடித்துவிட்டார் அர்ஜூன் தாமஸ். அங்கேயே விதவிதமான பிரேமுக்குள் அழகான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

பொதுவாக போட்டோ ஷூட்டிற்காக உயர்ந்த விலைகளில் உடைகளை வாங்கி விதவிதமாக போஸ் கொடுப்பார்கள். ஆனால் இங்கோ, தம்பதியினர் நடத்துநருக்காக உடையில் இருக்கின்றனர். பேருந்து நிலையத்திற்குள் டீக்குடிப்பது, பேருந்துக்கள் அமர்ந்திருப்பது உள்ளிட்ட பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தம்பதியினர் வேலைக்கு செல்வதற்காக அடிக்கடி வரும் பேருந்து நிலையத்தையே போட்டோ ஷூட்டிற்கும் பயன்படுத்தியுள்ளனர். இதுதவிர ரயில் நிலைய தண்டவாளங்களிலும் நின்றும் அவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். எல்லோரையும் விட சற்று வித்தியாசமாக எடுக்கப்பட்ட இந்த போட்டோ ஷூட் குறித்து அவர்கள் கூறும்போது, இதுதான் எங்களுக்கு பிடித்திருக்கிறது. பிடித்ததையே செய்துள்ளோம் என முடித்துக்கொண்டனர்.