மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே, இடஒதுக்கீடு கோரி கடுமையாகப் போராடி வருகிறார். அவ்வப்போது உண்ணவிரதப் போராட்டங்களையும் நடத்தினார்.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி, ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி மனோஜ் ஜராங்கே நடைப்பயணத்தைத் தொடங்கியதுடன், 15,000 பேர் சுமார் 750 வாகனங்களில் சென்றனர். இதனால் மும்பையே ஸ்தம்பித்தது. அப்போது, ’தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’ என்று மனோஜ் ஜராங்கே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. இதனையடுத்து, மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜுக்கு பழச்சாறு கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி, மகாராஷ்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மராத்தா இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்கீழ் மராத்தா சமூகத்தினருக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி, மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே பாட்டீல், மீண்டும் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக ஆங்கில ஊடகமான பி.டி.ஐ. செய்தி வெளியிட்டிருந்தது. சத்ரபதி சம்பாஜிநகரில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் அவர் போராட்டத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், போராட்டத்தின் 9வது நாளான இன்று, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த 9 நாட்களில், தொடர்ந்து சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் மருத்துவச் சிகிச்சை பெறாமலும் ஜராங்கே உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று 8வது நாளின்போது அவரால் எழுந்து அமரமுடியாத அளவுக்கு மிகவும் சோர்வடைந்தார். மருத்துவச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும், இதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை வலியுறுத்தினர். எனினும் அவர் தனது போராட்டத்தில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில்தான், தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”மராத்தா சமூகத்தின் உணர்வுகளைக் கருத்தில்கொண்டும், ஆதரவாளர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்ததாலும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறேன். மராத்தா சமூகத்தைப் புண்படுத்துவதற்குக் காரணமானவர்கள் தப்ப மாட்டார்கள். மராத்தா சமூகத்தினர் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். இடஒதுக்கீடுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்” எனத் தெரிவித்தார்.
இது, (செப்டம்பர் 17-23, 2024 - 9 நாட்கள்) அவருடைய 7வது போராட்டம் ஆகும். இதற்கு முன்பு அவர் மேற்கொண்ட போராட்டங்களின் பட்டியல் குறித்து இங்கு பார்ப்போம்.
ஆகஸ்ட் 29-செப்டம்பர் 14, 2023 (17 நாட்கள்)
அக்டோபர் 25-நவம்பர் 2, 2023 (9 நாட்கள்)
ஜனவரி 26-27, 2024 (1 நாள்)
பிப்ரவரி 10. -26, 2024 (17 நாட்கள்)
ஜூன் 8-13, 2024 (8 நாட்கள்)
ஜூலை 20-24, 2024 (5 நாட்கள்)