வயநாடு  புதிய தலைமுறை
இந்தியா

கேரளா | “தேர்தலில் வாக்களிக்க வேண்டாம்!” - மிரட்டிய மாவோஸ்டுகள்... வைரல் வீடியோவால் பரபரப்பு!

கேரள மாநிலம் வயநாடு அருகே தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களை மாவோயிஸ்டுகள் வலியுறுத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

18 ஆவது மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ள இத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடையும் சூழலில் சர்ச்சையான பேச்சுக்களும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி, ஆனி ராஜா சுரேந்திரன் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில், மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களை மாவோயிஸ்டுகள் வலியுறுத்தியது தொடர்பாக வெளியான வீடியோ மக்களிடையே தற்போது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் வயநாடு, பாலக்காடு போன்ற பகுதிகளில் மாவோயிஸ்டுகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம் என்பது செய்தியாகவே இருந்தது. ஆனால், முதன்முறையாக மாவோயிஸ்டுகள் அங்கே இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தும் விதமாக வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

வைரலாகும் வீடியோவின்படி, இன்று காலை 6 மணி அளவில் வயநாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பமலை தேயிலைத் தோட்டத்திற்கு 4 மாவோயிஸ்டுகள் வந்து சென்றுள்ளனர். கைகளில் துப்பாக்கிகளுடன், அவர்களின் சீருடைகளில் வரும் அவர்கள் 20 நிமிடத்திற்கும் மேலாக மக்களிடம் பேசியுள்ளனர்.

அதில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டாம். அரசு தரப்பில் இருந்து தொழிலாளர்களாகிய நமக்கு எந்த வசதியும் செய்து கொடுப்பதில்லை. குறிப்பாக மருத்துவம் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதில்லை” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், ‘எங்களுடன் நகர்ப்புற பகுதிகளுக்கு வந்து போராடுங்கள்’ என்று மக்கள் சில கேட்டு கொண்டதற்கு.... ’தேவைப்பட்டால் வருவோம்’ என்று பதிலளித்து அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கேரளா காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீடியோவில் இருந்த 4 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.