ஜார்கண்ட் மாநிலத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்கில், ஒரு பெண் எப்படிப்பட்டவர் என்று மனுஸ்மிருதி நூலை மேற்கோள்காட்டி அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தும்பாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன், தனக்கு பராமரிப்பு தொகையையும் வழங்க வேண்டும் என்றும் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம், மனைவிக்கு 30,000 ரூபாயை பாரமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நிதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இவரின் மனுவை விசாரித்த நீதிபதிமன்றம், மனுஸ்மிருதி நூலை மேற்கோள்காட்டி , பெண்ணானவர் எப்படிபட்டவர் என்று கூறியுள்ளது.
இவ்வழக்கினை விசாரித்த தனி நீதிபதி சுபாஷ் சந்த் இருத்தரப்பினர் வாதங்களையும் கேட்டறிந்தார்.
பெண் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ராகுல் குமார் இது குறித்து கூறுகையில், ”வரதட்சனை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர். மேலும் கணவரின் தாய் மற்றும் அவரின் பாட்டிக்கு சேவை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்” என்று குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
கணவர் தரப்பில் இது குறித்து கூறுகையில், “என் தாய் மற்றும் பாட்டியை எந்த வித காரணமும் இல்லாமல் பிரிந்து வாழுமாறு என் மனைவி அழுத்தம் கொடுக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுபாஷ் சந்த், “இந்திய கலாச்சாரத்தின்படி திருமணமான பெண் தனது வயதான மாமியாரை பார்த்துகொள்ள வேண்டியது அவசியம். மேலும் கலாச்சாரத்தினை பாதுக்காக்க வேண்டுமென்றால் இது போன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கணவரின் தாய் மற்றும் பாட்டியை பார்த்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தில் சட்டப்பிரிவு 51A பிரிவு (f) இன் கீழ் ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு நமது கலச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தினை பாதுகாப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் அவரது கணவன் தாயைவிட்டு வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.”
மேலும் நீதிபதி மனுஸ்மிருதி போன்ற இந்து மத நூலை மேற்கோள்காட்டி..
“வலிமைமிக்க பெண் ஒருவர் சவால்களை தோற்கடிப்பவர், சவால்களால் தோற்கடிக்கப்படுபவர் இல்லை. எதிரிகளையும் அவர்களின் படைகளையும் தோற்கடிக்க ஆயிரம் வீரம் உன்னிடத்தில் உள்ளது”
பேராசிரியர் தெரசா சாக்கோ எழுதிய “ குடும்ப வாழ்க்கைக் கல்விக்கான அறிமுகம் “ என்ற புத்தகம் குடும்பத்தில் மனைவியின் பங்கை விவரிக்கிறது. மேலும் பிரிந்திருக்கும் மனைவி கணவனுக்கு இடையே எழும் பிரச்னைக்கு முதல்காரணம் மனைவி குடும்பத்தில் சேவை செய்ய விரும்பாததுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே கணவரை பிரிந்து வாழ மனைவி எந்த ஒரு தகுதியான காரணங்களையும் கூறவில்லை. ஆகவே குடும்ப நிதிமன்றம் பராமரிப்புத்தொகையாக இப்பெண்ணுக்கு வழங்கிய 30,000 ரூபாயையும் ரத்து செய்து உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ஆனால் குழந்தையின் பராமரிப்புக்காக 15, 000 முதல் 25, 000 ரூபாயாக அளிக்கவேண்டும் என்று குழந்தை பராமரிப்பு தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.