மனோஜ் குமார் வர்மா  ANI
இந்தியா

மருத்துவர்கள் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய அரசு.. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்!

கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மனோஜ் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் சமூக ஆர்வலர் சஞ்ஜய் ராய், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறுபுறம் இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்குத் திரும்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், "போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புங்கள்" என்று மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், டாக்டர்களின் கோரிக்கைகளில், முதல்வர் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

ஆனால், அதனை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சூழலில், போராட்டக்குழுவின் கூட்டமைப்பு நேற்று சில கோரிக்கைகளை முன்வைத்தது. அதில், கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயல் மற்றும் மம்தா பானர்ஜி அரசில் உள்ள சுகாதார மற்றும் குடும்பநல துறையில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படிக்க: NZ Vs SL | 16 ஆண்டுகளுக்குப் பிறகு 6 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி.. என்ன காரணம் தெரியுமா?

இதையடுத்து போராட்டக் குழுவினர் வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்ற மேற்கு வங்க அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. அந்த வகையில், கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மனோஜ் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

வினீத் கோயல்

1998-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான மனோஜ் குமார் வர்மா, கொல்கத்தா காவல் துறையின் மூத்த அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஜாவேத் ஷமிக்கு பதிலாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், 1994 பேட்ச் அதிகாரியான வினீத் கோயல், டிசம்பர் 2021 முதல் கொல்கத்தா காவல்துறை ஆணையராக பதவி வகித்தார். தற்போது அவர் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (சிறப்புப் பணிக்குழு) ஆகப் பொறுப்பேற்க இருக்கிறார்.

மருத்துவர் கொலை காரணமாக போராட்டக் குழுவினர் வைத்த கோரிக்கைகளில் முதற்கட்டமாக காவல் ஆணையாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தவிர, காவல் துறையில் இன்னும் சிலரும் மாற்றப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: அதிர்ச்சி! பெண் தேர்வரின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. விசாரணைக்கு உத்தரவிட்ட அசாம் முதல்வர்!