இந்தியா

மூக்கில் குழாயுடன் மனோகர் பாரிக்கர்..! புகைப்படத்தை பார்த்த பின் வலுக்கும் எதிர்ப்பு ..!

மூக்கில் குழாயுடன் மனோகர் பாரிக்கர்..! புகைப்படத்தை பார்த்த பின் வலுக்கும் எதிர்ப்பு ..!

Rasus

சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு பிறகு இன்று வெளிவந்துள்ளார். அத்துடன் பாலத்தின் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டார். இந்தப் புகைப்படம் தற்போது எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர். 63 வயதான அவர் கணையப் பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டார். இதற்காக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கோவாவில் வைத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். வெளி உலகிற்கு அவர் வராத காரணத்தினால் அவரின் புகைப்படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சில மாதங்களுக்கு பின் முதன்முறையாக இன்று வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் மனோகர் பாரிக்கர். அத்துடன் மாண்டோவி நதி அருகே பாதி நிலையில் கட்டப்பட்டிரும் பாலத்தின் ஆய்வுப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் மனோகர் பாரிக்கரின் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. உடல் மெலிந்த நிலையில் காணப்படும் மனோகர் பாரிக்கர் ஒருவரின் துணையுடனே குறிப்பிட்ட தூரம் நடந்துள்ளார். இரண்டு மருத்துவர்களும் அவர் உடன் இருந்துள்ளனர். பால ஆய்வுப் பணிக்காக சுமார் 6 கி.மீ தூரம் அவர் காரில் பயணம் செய்ததாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தப் பாலத்தின் பணிகள் அடுத்தாண்டு முடிவடைய உள்ளது. இதனிடையே இந்தப் புகைப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரான உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல்நிலை சரியில்லாமல் மனோகர் பாரிக்கின் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நேரத்திலும் அவரை வேலை செய்ய நிர்பந்திப்பது மற்றும் புகைப்படம் எடுக்க நிர்பந்திப்பது எத்தனை மனித தன்மையற்ற செயல். இந்தப் பிரச்னைகள் இல்லாமல் அவர் சிகிச்சை பெற ஏன் அனுமதிக்கக் கூடாது ” எனக் கூறியுள்ளார். அதேசமயம் தனது விருப்பத் திட்டமான பாலத்தை ஆசைப்பட்டே மனோகர் பாரிக்கர் பார்வையிட்டதாக கோவா முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.