ஒரு அரசியல் கட்சி தலைவர் இறந்தால் அது அந்தக் கட்சிக்காரர்களின் துக்கம். ஆனால் அதுவே ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு கட்சி சார்ந்த முதல்வர் இறந்தால் அது ஒட்டுமொத்த மக்களின் துயரம். அப்படி பதவி காலத்தில் திடீரென மறைந்த முதல்வர்கள் யார்? யார்? இதை அறிந்துக் கொள்ள ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.
கோபிநாத் போர்டோலோய்:
இவர் சுதந்திர இந்தியாவில் அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்றவர். இவர் அசாம் மாநிலத்தின் தனி உரிமைக்காக விடாமல் போராடியவர். மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலுடன் நெருங்கி பணியாற்றியவர். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்திய திரும்பிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர். இவர் 1950ஆம் ஆண்டு அசாம் மாநில முதல்வராக இருந்தப் போது மறைந்தார். இந்தியாவில் முதலமைச்சராக பதவியிலிருந்தப் போது மறைந்த முதல் முதல்வர் இவர்தான். இறப்புக்குப் பிறகு 1999ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ரவிசங்கர் சுக்லா:
ரவிசங்கர் சுக்லா சுதந்திரப் போரட்டத்தில் பெரும் பங்காற்றியவர். அத்துடன் பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விக்காக பெரிதும் குறள் கொடுத்தவர். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பதவியேற்றார். மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் பீலை இரும்பு ஆலையை நிறுவியவர் ரவிசங்கர். ஆனால் பதவியேற்ற இரண்டு மாதத்தில் அவர் உயிரிழந்தார்.
ஸ்ரீகிருஷ்ணா சிங்:
1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும், பீகாரின் முதல் முதல்வராக இவர் இருந்தார். 1961ஆம் ஆண்டு முதல்வராக பதவியிலிருந்த போது இவர் மறைந்தார்.
டாக்டர். பிதன் சந்திர ராய்:
பிதன், மேற்குவங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவி வகித்தவர். இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வந்தவர். 1962ஆம் ஆண்டு மேற்குவங்க முதல்வராக இருந்த நிலையில் இயற்கை எய்தினார்.
மாரோட்ராவ் கன்னம்வார்:
மகாராஷ்டிர மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக பதவியேற்றவர் கன்னம்வார். இவர் 1962 ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியிலிருந்த ஒராண்டிற்குப் பிறகு இவர் உயிரிழந்தார்.
பல்வந்த்ராய் மேத்தா:
குஜராத் மாநிலத்தின் முதல்வராக 1963ஆம் ஆண்டு பிப்ரவரி 25 தேதி பல்வந்த்ராய் மேத்தா பதவியேற்றார். இவர்தான் இந்தியாவில் போர் காலத்தில் மரணமடைந்த ஒரே முதல்வர். அதாவது 1965ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இவர் பயணித்த விமானம் பாகிஸ்தான் விமான படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார் பல்வந்த்.
சி.என்.அண்ணாதுரை:
அண்ணா என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் சி.என்.அண்ணாதுரை. இவர் தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் பெரும் பங்காற்றியவர். இவர் முதலமைச்சராகும் முன் பத்திரிகையாளராக பணியாற்றியவர். இவரது ஆட்சியில்தான் ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ‘தமிழ்நாடு’ என மாற்றப்பட்டது. இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு 1969ஆம் ஆண்டு மறைந்தார். அதுவும் பதிவி காலத்தில் நடந்தது.
தயானந்த் பன்தோட்கர்:
கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றவுடன் அம்மாநிலத்தின் முதல் முதல்வராக இவர் 1963 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதன்பிறகு தொடர்ச்சியாக 1967,1972 ஆம் ஆண்டு முதல்வர் பதவி வகித்தார். இப்பதவியை அவர் 1973 ஆம் ஆண்டு மறையும் வரை வகித்துவந்தார்.
பர்க்கத்துல்லா கான்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரே இஸ்லாமிய முதல்வர் பர்க்கத்துல்லா கான்தான். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக 1971ஆம் ஆண்டு பதவியேற்றார். 1973ஆம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார். ஜோத்பூரில் இவர் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல்லா:
‘ஷேர்-இ-காஷ்மீர்’ என்று அழைக்கப்பட்டவர் ஷேக் அப்துல்லா. இவர் தேசிய மாநாட்டு கட்சியை நிறுவியவர். மூன்று முறை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். 1982 ஆம் ஆண்டு இவர் உயிரிழந்தார்.
எம்.ஜி. ராமச்சந்திரன்:
திரைப்பட நடிகராக இருந்து முதல்வர் ஆனவர். இவர் 1977ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்தவர். இவர் மக்களிடம் இருந்து நீங்காத அன்பை பெற்றவர் எம்.ஜி.ஆர். இவர் 1987ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
சிமன்பாய் பட்டேல்:
சிமன்பாய் பட்டேல் குஜராத்தை நவீனமயமாக்க முற்பட்டவர். இவர் முதலில் 1973ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்றார். அதன்பின் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவி விலகினார். மீண்டும் 1990 ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவிக்கு வந்தார். இவரின் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவில் முதன்முறையாக பசு வதைக்கு தடை கொண்டுவரப்பட்டது. அத்துடன் நர்மதா அணை திட்டம் இவரது ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டது.
பீண்ட் சிங்:
பீண்ட் சிங் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக 1993ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு வருடங்கள் பதவி வகித்தவர். இவர் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்கியவர். 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரது கார் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிக்கி இவர் மரணம் அடைந்தார்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி:
இரண்டு முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் ரெட்டி. இவர் இரண்டாவது முறை முதல்வராக இருந்த போது நல்லாமலை வனப்பகுதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
டோர்ஜி கந்தூ:
கந்தூ, 2009 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இவர் அதற்கு முன் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அத்துடன் இவர் வங்கதேச போரின் போது சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றவர். இவரும் ராஜசேகர ரெட்டியை போல் இட்டாநகருக்கு செல்லும் போது விமான விபத்தில் மரணம் அடைந்தார்.
ஜெ.ஜெயலலிதா:
தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக பதவி வகித்தவர் ஜெ.ஜெயலலிதா. இவர் 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 2001ஆம் ஆண்டு டான்சி வழக்கின் காரணமாக பதவி விலகினார். பின்பு 2002 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்தார். அதன்பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி மறு முறை முதல்வர் பதவியிலிருந்து விலகினார். எனினும் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். இவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.
மனோகர் பாரிக்கர்:
2000-ஆம் ஆண்டு முதல் முறையாக கோவா முதலமைச்சராக பாரிக்கர் பதவியேற்றார். இந்தியாவின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான ஐஐடியில் படித்த, முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர். பாஜக கட்சிக்கு கோவா முன்னுதாரணமாக திகழும் வகையில் செயல்பட்டார்.
அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தையும் பாஜகவிற்கு ஆதரவு தரும் வகையில் பாரிக்கர் செயல்பட்டார். அத்துடன் 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட காரணமாக இருந்த கூட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் பாரிக்கர். மூன்று முறை கோவா முதலமைச்சராக பணியாற்றியவர். இவர் கணையப் புற்றுநோயால் அவதிபட்டு 2019 மார்ச் 17ஆம் தேதி உயிரிழந்தார். இந்தியாவில் பதிவி காலத்தில் உயிரிழந்த கடைசி முதல்வர் தற்போதைக்கு இவர்தான்.