இந்தியா

காட்டு யானை இறப்பால் கலங்கி நிற்கும் கிராம மக்கள்...!

காட்டு யானை இறப்பால் கலங்கி நிற்கும் கிராம மக்கள்...!

webteam

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மக்களோடு அன்பாக பழகி வந்த மணியன் என்ற காட்டு யானை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களோடு மக்களாக பழகி வந்தது காட்டு யானை மணியன். குறிப்பாக பத்தேரியில் இருந்து புல்பள்ளி செல்லும் சாலையில் எப்போதும் மணியன் யானையை பார்க்க முடியும். அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மணியன் யானையோடு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது, அதற்கு உணவு கொடுப்பது என அதிக நெருக்கத்தை காட்டுவார்கள். மணியன் யானையும் எப்போதும் ஊருக்குள் சுற்றி வந்தாலும் இதுவரை மக்களை தாக்கியதில்லை. 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வயநாடு மாவட்டம் செதலயம் வனப்பகுதியில் மணியன் யானை மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தபோது, அங்கு வந்த மற்றொரு காட்டு யானை, மணியன் யானையை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் வயிறு மற்றும் நெத்தியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மணியன் யானை உயிரிழந்தது.

மணியன் யானை உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை காலையில் பொதுமக்களுக்கு தெரியவர, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மணியன் குறித்து பேசிய அப்பகுதி மக்கள்,

மணியன் யானை மக்களோடு நெருங்கி பழகி வந்தது. அது பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. மக்களோடு நன்கு பழகிய அந்த யானை, மக்கள் கையில் இருந்து உணவு வாங்கி உட்கொள்ளும் அளவிற்கு பழகி விட்டது.  மணியன் யானையால் இதுவரை பொதுமக்கள் மற்றும் விவசாய பயிர்களுக்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை. அதன் உயிரிழப்பு இந்த பகுதி மக்களுக்கு மிக பெரிய இழப்பு. அது காட்டுயானை தான். ஆனால் ஊருக்கே செல்லப்பிராணி  என தெரிவித்துள்ளனர். 


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், மணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர், பின்னர் அப்பகுதியில் மணியன் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.