கலால் கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று விசாரித்துவருகிறது. இந்நிலையில், சிசோடியா கைது செய்யப்படலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிதி மற்றும் கலால் துறைகளின் பொறுப்பில் வகிக்கும் சிசோடியா, கடந்த ஆண்டு ஜூலையில், டெல்லியில் கலால் கொள்கை 2021-22ஐ உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் சிசோடியாவின் வீடு, அலுவலகம் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் சிபிஐ விசாரணையில் ஈடுபட்டது. அதையடுத்து, அடுத்த கட்டமாக இந்த வழக்கின் எப்ஐஆரில் சிசோடியா உட்பட 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிசோடியாவின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை நடத்தியதோடு மட்டுமில்லாமல், அவரது வங்கி லாக்கரையும் சோதனைக்குள் கொண்டுவந்தது. அதற்கு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் துணை முதல்வர் ஒரு நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சிசோடியாவின் பெயரை சிபிஐ குறிப்பிடவில்லை.
அதனைத்தொடர்ந்து துணை முதல்வரான சிசோடியா, பிப்ரவரி 19ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இதற்கிடையில், 2023-24ஆம் ஆண்டிற்கான டெல்லியின் பட்ஜெட்டை இறுதி செய்வதில் சிசோடியா மும்முரமாக இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரினார். இந்நிலையில் தற்போது பட்ஜெட்டுக்கான இறுதிகட்ட பணிகள் முடிந்துவிட்டததால், இன்று மனிஷ் சிசோடியா மீண்டும் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜரானார்.
விசாரணைக்கு செல்வதற்கு முன்னதாக ராஜ்காட் பகுதில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்திற்கு அவர் சென்றார். அதற்குபிறகு அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று மீண்டும் சிபிஐக்கு விசாரணைக்கு செல்கிறேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சில மாதங்கள் சிறையில் இருந்தாலும் கவலையில்லை. நான் பகத்சிங்கை பின்பற்றுபவன், சிறைக்கு செல்வதற்கு எல்லாம் அச்சப்பட மாட்டேன்" என என்று பதிவிட்டுள்ளார்.