மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே வெடித்து வரும் மோதலுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, ’தனது சொந்த மாநிலத்தில் நடந்துவரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் மோடியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த வீடியோவில், “மணிப்பூரில் நடந்து வரும் கலவரம், மூன்று மாதத்தை நிறைவடைய இருக்கிறது. ஆனால், மாநிலத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை. கலவரம் காரணமாக, பல விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியவில்லை. மேலும், கலவரங்களால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, மணிப்பூர் மக்கள் அனைவரையும் காப்பாற்றி, மாநிலத்தில் முன்பு நிலவிய அமைதியை மீட்டெடுக்க பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு (அமித் ஷா) வேண்டுகோள் விடுக்கிறேன்.
மணிப்பூரில் எனக்கு ஒரு வீடு உள்ளது. ஆனால் நான் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகி வருகிறேன். நான் மணிப்பூரில் இல்லாவிட்டாலும், இந்த கலவரம் எப்போது முடிவுக்கு வரும் என்றுதான் நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மே 2ஆம் தேதி முதல் மணிப்பூரில் வன்முறை வெடித்து வருகிறது. அப்போது இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், “எனது மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது, தயவு செய்து உதவுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் பல முன்னணி ஊடகங்களிடம் உதவி கேட்டு தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மீராபாய் சானுவும் வேண்டுகோள் விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.