மணிப்பூர் கலவரம், உச்ச நீதிமன்றம் file image
இந்தியா

மணிப்பூர்: 142 கொலைகள், 5,000 வன்முறை சம்பவங்கள்! மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களில் நடந்த வன்முறையில் மொத்தம் 142 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Prakash J

நேற்று நடந்த வன்முறையில் ஒருவர் பலி

கடந்த மே 3ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி ஆகிய இரண்டு இனக் குழுக்களிடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அங்கு தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் காங்போக்பி மாவட்ட எல்லைப் பகுதியில் நேற்று இரவு நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்சுப் மாவட்டத்தின் பொதுப் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் மலைகளைக் குறிவைத்து இருதரப்பினருக்கிடையே கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

manipur violence

இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மணிப்பூர் கலவர வழக்குகள்

இதற்கிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தன. முன்னதாக இந்த வழக்கில், ’மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து மாநில அரசு ஜூலை 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மாநில அரசு புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.

142 கொலைகள்; 5,995 எஃப்ஐஆர்கள், 5,000 வன்முறை சம்பவங்கள்!

அறிக்கையை தாக்கல் செய்த தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி, ’மணிப்பூரில் கடந்த 2 மாதங்களில் நடந்த வன்முறையில் மொத்தம் 142 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க 5,995 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6,745 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 6 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மே மாதத்தில் இருந்து மாநிலத்தில் 5,000 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

manipur govt

இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிகபட்ச இறப்புகள் பதிவாகியுள்ளன. அமைதியைக் காக்க 124 துணை ராணுவப் படைகளும், 184 ராணுவப் படைகளும் களத்தில் உள்ளன. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் பல போட்டித் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன் அதுகுறித்த மதிப்பாய்வு தினசரி செய்யப்படுகிறது. வழக்கு அடிப்படையில் இணையத் தடையை நிபந்தனையுடன் தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

manipur violence

தொடர்ந்து மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்தும் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், குக்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோலின் கொன்சால்வேஸிடம், மணிப்பூர் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் உள்ள ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பரிசீலிக்குமாறு தெரிவித்தது.

”மணிப்பூர் பிரச்னையைப் பிரித்து பார்க்க வேண்டாம்!”

இதைத் தொடர்ந்து நீதிமன்றம், "மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை உச்ச நீதிமன்றம் வழிநடத்த முடியாது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் வேலை. எங்களிடம் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது, ஆனாலும் எங்களின் அதிகாரத்தில் தெளிவாக இருக்கிறோம். மாநிலத்தில் ஏற்கெனவே வன்முறைச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்ற வழக்குகளை வைத்து மணிப்பூரில் கலவரத்தை மேலும் தூண்டக் கூடாது. மணிப்பூர் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்; இதை பிரித்து பார்க்க வேண்டாம். நாங்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப்போ, பாதுகாப்பு வழங்கும் அமைப்பு அல்ல" என்று தெரிவித்தது. மேலும் மாநில அரசு மனுதாரர்கள் தங்கள் வாதங்களின்போது பழங்குடியினரின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என வலியுறுத்தினர்.

Supreme Court

இணையச் சேவை வழக்கில் நாளை உத்தரவு

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 2 மாதங்களாக இணையச் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்கக் கோரி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், ’இணையச் சேவைகளை பாதி அளவு தொடர்ந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை உச்சநீதிமன்றம் நாளை (ஜூலை 11) விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

ஜோமி மாணவர் கூட்டமைப்பு சங்கத்திற்கு எதிராக எஃப்ஐஆர்

இன்னொரு புறம், மணிப்பூர் அரசு உள்துறை ஆணையர், 'The Inevitable Split - Documents On State Sponsored Ethnic Cleaning in Manipur, 2023' என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்ட ஜோமி மாணவர் கூட்டமைப்பு சங்கத்திற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மணிப்பூர் காவல் துறை தலைமை இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ’குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 95இன்கீழ் புத்தகத்திற்கு எதிராக தேவையான வாரண்டுகளை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார். இந்தப் புத்தகம், மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக வெடித்த வன்முறைக்கு அரசின் நிர்வாகத்தைக் குற்றம்சாட்டுவதாகச் சொல்லப்படுகிறது. அதன்பேரிலேயே இந்தப் புத்தகத்தைத் தடை செய்யச் சொல்லி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

zumi student's federation

அரசு மீது குற்றஞ்சாட்டும் ஜோமி மாணவர் கூட்டமைப்பு

இதுகுறித்து ஜோமி மாணவர் கூட்டமைப்பு, ”மணிப்பூர் அரசு ஆயிரக்கணக்கான பொய்களைக் கட்டவிழ்த்து வருகிறது. இந்த இன அழிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது மாநில அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்டு வழிநடத்தப்படுகிறது. அதனால்தான் பைரோன் சிங் அரசைக் குற்றஞ்சாட்டி வருகிறோம். அதேநேரத்தில் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் நசுக்குவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” என தெரிவித்துள்ளது.