மணிப்பூர் வீடியோ twitter
இந்தியா

மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலம்; கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

மணிப்பூரில் மெய்டீஸ் இன இளைஞர்கள் சிலர் குக்கி இனப் பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்துச் செல்லும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Prakash J

இடஒதுக்கீடு தொடர்பாக மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் வன்முறை வெடித்து வருகிறது. இதில் 142 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 5,000 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும் அம்மாநில அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

manipur violence

இதுதவிர, மக்கள் பல நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. என்றாலும், மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே வெடித்து வரும் மோதலுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் முதல் விளையாடு வீரர்கள் வரை எனப் பலரும், ’மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, அந்தப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மணிப்பூர் வீடியோ

கடந்த மே 4ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு மனித உரிமை ஆணையம் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.