மணிப்பூர் pt web
இந்தியா

மணிப்பூர் கலவரம்; வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பல மாதங்களுக்குப் பிறகு நல்லடக்கம்

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் ஓரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Angeshwar G

ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் உலகளவில் விவாதத்திற்கு உள்ளானது. கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. தொடர்ந்து நீடித்த கலவரத்தில் பலநூற்றுக்கணக்கான தேவாலயங்கள், வீடுகள் இடிக்கப்பட்டன. வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, அதுகுறித்தான வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வன்முறையில் ஏறத்தாழ 175 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்த 87 பேரின் சடலங்கள் பல மாதங்களுக்குப் பிறகு அம்மாநிலத்தின் சுராசந்த்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. செக்கனில் நடைபெற்ற அடக்கவிழாவில் கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களின் துப்பாக்கியின் குண்டுகள் முழங்க கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு குகி- சோ தியாகிகளின் கல்லறை என பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடக்கவிழாவில் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பழங்குடியின சமூகங்களைச் சேர்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே அடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

87 உடல்களில் 41 பேரின் உடல்கள் இம்பாலில் உள்ள வெவ்வேறு பிணவறைகளில் இருந்து டிசம்பர் 14 ஆம் தேதி இம்பாலுக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 உடல்கள் சுராசந்த்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.