ராகுல் காந்தி, சாரதா தேவி twitter and ANI
இந்தியா

”இதை அரசியலாக்காதீர்கள்” - ராகுல் காந்தியின் பயணத்தை பாராட்டிய மணிப்பூர் பாஜக தலைவர்!

Prakash J

மணிப்பூரில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.

மணிப்பூர் நிவாரண முகாம்கள்

ஒன்றரை மாத காலத்துக்கும் மேலாக கலவரம் நீடித்துவரும் நிலையில், கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

மணிப்பூரில் ராகுல்

மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் கடந்த ஜூன் 29ஆம் தேதி சந்திப்பதாக இருந்தது. இதற்காக அவர் அன்றைய தினம் மணிப்பூர் சென்றார். மணிப்பூரின் கராசந்த்பூருக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணபூரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் காவல் துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து, ராகுல் காந்தி இம்பால் திரும்பினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து , காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, கட்சித் தொண்டர்களும், அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரத்தில், ராகுல் மணிப்பூரில் தங்கியிருந்தபோதே, காம்போடி பகுதியில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனையை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

ராகுல் காந்தி, மணிப்பூர் நிவாரண முகாம் குழந்தைகள்

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற ராகுல் காந்தி மணிப்பூரின் இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர், ராகுல் காந்தி, மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உகேயைச் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ”அவர்களின் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தினேன். நிவாரண முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை நிவர்த்தி செய்யுமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

நிவாரண முகாம் குழந்தைகளுடன் ராகுல்

இதனிடையே ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்து உள்ளது. ”அரசியல் லாபத்துக்காக மட்டுமே ராகுல் காந்தி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும்” எனவும் பாஜக தலைவர்கள் விமர்சித்த நிலையில், மணிப்பூர் பாஜக மாநிலத் தலைவர் சாரதா தேவி, ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தைப் பாராட்டியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

அவர், “தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியின் மணிப்பூர் மாநில பயணத்தை நான் மனதார பாராட்டுகிறேன். மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.