குல்தீப் சிங், மணிப்பூர் ani
இந்தியா

மணிப்பூர் | ஷாக் கொடுத்த ட்ரோன் - ராக்கெட் தாக்குதல்.. காரணம் யார்? உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை!

சமீபத்தில் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் புதிதாகப் பயிற்சி பெற்ற 900 குக்கி தீவிரவாதிகள் மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

Prakash J

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த வருடம் (2023) தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த வன்முறை, ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

சமீபத்தில் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் இறந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரோன் தாக்குதலை தடுக்க தவறிய மாநில காவல்துறை தலைவரையும் பாதுகாப்பு ஆலோசகரையும் நீக்கக்கோரி மாணவர் அமைப்பினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுக்க முற்பட்டபோது இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். இதற்கிடையே பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இம்பாலின் இரு மாவட்டங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிக்க: ‘திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!

இந்த நிலையில், சமீபத்தில் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் புதிதாகப் பயிற்சி பெற்ற 900 குக்கி தீவிரவாதிகள் மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள், தலா 30 பேர் கொண்ட பிரிவுகளில் குழுவாக உள்ளனர் என உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளதாக, மணிப்பூர் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், தெற்கு மணிப்பூரில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் இந்த புலனாய்வு அறிக்கை அனுப்பப்பட்டதாக உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குல்தீப் சிங்

இந்தியா-மியான்மர் எல்லை மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக செல்கிறது. எல்லைக்கு அருகில் வசிப்பவர்கள் எந்த ஆவணமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் 16 கிமீ தூரம் செல்ல அனுமதிக்கும் சுதந்திர நடமாட்ட ஆட்சியை (எஃப்எம்ஆர்) இந்தியா ரத்து செய்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் மியான்மர் இடையே 1,643 கிமீ சர்வதேச எல்லையில் சுமார் ரூ.31,000 கோடி செலவில் எல்லை வேலி மற்றும் சாலைகள் அமைக்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், மியான்மர் எல்லையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்கா| ட்ரம்ப் மனைவி எழுதிய சுயசரிதை.. அடுத்த மாதம் வெளியீடு.. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?