மணிப்பூர் கலவரம் pt web
இந்தியா

பதற்றத்திலேயே இருக்கும் மணிப்பூர்.. முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் மீதே நடந்த துப்பாக்கிச்சூடு

PT WEB

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க, வன்முறைக் காடானது மணிப்பூர். மோதல்களும் கலவரங்களும் தீ வைப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது. வீடுகள் தீக்கிரையானதால், பள்ளிகளும் அரசுக் கட்டடங்களும், முகாம்களாகின.

பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, அதை பார்த்தவர்களையெல்லாம் பதற வைத்தது. மணிப்பூரில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறைகள், ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலை, மணிப்பூர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவின் தோல்விச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலின்போது, பல வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன. தீ வைப்புகளும் நிகழ்ந்தன. மணிப்பூர் மாநிலத்தின் 2 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது, காங்கிரஸ் கட்சி.

இனக்கலவரத்தில் இதுவரை பாதிக்கப்படாமல் இருந்தது ஜரிபாம் மாவட்டம்தான். இதையும் விட்டுவைக்கவில்லை வன்முறை நெருப்பு. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்காக, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் சென்றிருந்தபோது, பற்றி எரிந்தது ஜரிபாம் மாவட்டம். அங்கு புதாங்கல் என்ற இடத்தில் மெய்தி இனத்தவரின், 70 க்கும் அதிகமான வீடுகள் தீ வைக்கப்பட்டன. அங்கு கடந்த 6 ஆம் தேதி காணாமல் போன ஒருவரின் உடல், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை, மத்திய பாதுகாப்புப்படை, துணை ராணுவம் என ஒட்டுமொத்தமாக குவிக்கப்பட்டன.

இந்நிலையில் டெல்லியிலிருந்து திரும்பிய பின், அங்கு செல்லவிருந்தார் அம்மாநில முதலமைச்சர். ஆனால் அதற்கான ஏற்பாட்டுக்காக சென்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் காயமுற்றனர். தலைநகர் இம்பாலில் முதலமைச்சரின் மாளிகை அருகே கட்டடம் ஒன்றும் திடீரென தீக்கிரையாக்கப்பட்டது அங்கு அச்சத்தை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் புகையத் தொடங்கிய மோதல், இனக்கலவரமாக, 400 நாள்களுக்கும் மேல் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. மணிப்பூரை கலவர பூமியாகவே தக்க வைத்திருக்கிறது. வன்மம் கக்கும் மோதல் நீங்கி, அமைதி நிலவ, மணிப்பூரிலும் மத்தியிலும் ஆளும் பாஜக அடியெடுத்து வைக்கப் போவது எப்போது என்பதே, மில்லியன் டாலர் கேள்விகளாக முன்னே நிற்கிறது.