லைஷாராம் ஹெரோஜித் ndtv & x page
இந்தியா

காணாமல் போன 6 பேர்| ”அவர்கள் அப்பாவிகள்” - பாதுகாப்பாய் ஒப்படைக்க மணிப்பூர் நபர் வேண்டுகோள்!

மணிப்பூரில் தனது குழந்தைகளுடன் குடும்பத்தையும் கண்டுபிடித்துத் தருமாறு உறவினர்களை இழந்த நபர் பேட்டி கொடுத்துள்ளார்.

Prakash J

மணிப்பூர் என்றதுமே, இப்போது எல்லோர் நினைவுகளிலும் வருவது கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை மட்டுமே. ஆனால், அதற்கு இன்றுவரை முடிவில்லாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஆயுதமேந்திய குக்கி போராளிகள் என்று சொல்லக்கூடிய சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர், கடந்த 2 நாளுக்கு முன்பாக மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 குக்கி போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை ஆயுதமேந்திய குக்கி போராளிகள் கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் குடும்பத்தையும் கண்டுபிடித்துத் தருமாறு உறவினர்களை இழந்த நபர் பேட்டி கொடுத்துள்ளார். மணிப்பூரின் அரசாங்கத்தில் அரசு அதிகாரியாகப் பணிபுரிபவர் லைஷாராம் ஹெரோஜித். காணாமல் போன அந்த 6 பேரில் இவருடைய இரண்டு குழந்தைகள், மனைவி, மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி உட்பட 5 பேர் அடக்கம்.

இதையும் படிக்க: 2024 புக்கர்பரிசை வென்ற ’Orbital’ நாவல்! போன்கூட வைத்திருக்காத எழுத்தாளர்.. யார் இந்த சமந்தா ஹார்வி?

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தம்பால்கோங்கில் வசிக்கிறேன். காணாமல் போன 6 பேரில் ஐவர் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் அனைவரும் அப்பாவிகள். இதில் எனது இரண்டு கைக்குழந்தைகளும் இன்னும் பேசக்கூட இல்லை. மூத்த குழந்தை இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளது. தயவுசெய்து அவர்களை எந்தக் கொடுமையும் படுத்தாது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும்” என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளை, கடந்த சில மாதங்களாக மோதல் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Net.. Light.. Cut|பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முயற்சி.. Ministry of Sex உருவாக்க ரஷ்யா முடிவு?