manipur  pt web
இந்தியா

என்ன கொடுமை! - மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலம்; நெஞ்சை உலுக்கும் வார்த்தைகள்!

நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக தன்பக்கம் திருப்பியுள்ளது மணிப்பூர். குகி சமூகத்தின் பெண்கள் இருவரை ஆடைகளை கலைந்து சாலைகளில் நடக்க வைத்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Angeshwar G

இந்த அதிர்வு மணிப்பூர் மட்டுமின்றி நாடுமுழுவதும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் தங்களது கேள்விகளை போராட்டங்கள் வாயிலாகவும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும் எழுப்பி வருகின்றனர்.

மணிப்பூர் கலவரம்

தமிழகத்தில் பல கல்லூரி மாணவர்களும் பல்வேறு பகுதிகளில் மக்களும் ஆர்ப்பாட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் தங்களது பங்கிற்கு நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்க்ரால் செய்தி நிறுவனம் அப்பெண்களிடம் நடத்திய கலந்துரையாடலில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இம்பாலில் நியூ செக்கான் பகுதியில் வசிக்கும் 19 வயது குகி இளம் பெண்ணின் குடும்பத்தார் மற்ற மக்களுடன் கலவரப் பகுதியில் இருந்து வெளியேற முற்பட்டனர். அப்போது 19 வயது பெண்ணால் உடன் செல்ல முடியாமல் இருந்த போது அப்பெண் தனது தோழியுடன் தங்கி இருந்துள்ளார். தோழி குகி சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது கணவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இஸ்லாத்தை பின்பற்றும் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எவ்வித மோதல்களில் ஈடுபடாத காரணத்தால் அப்பகுதிகளில் அதிகமான கலவரம் நிகழவில்லை.

மணிப்பூர் கலவரம்

இதன் காரணமாக 19 வயது பெண் தனது தோழியின் வீட்டில் மறைந்திருந்துள்ளார். 10 நாட்களுக்குப் பின் கலவரம் சற்றே தனிந்த போது நிவாரண முகாமில் இருந்த பெற்றோர் அப்பெண்ணை இம்பாலில் இருந்து வெளியேறி நிவாரண முகாமிற்கு வந்துவிடுமாறும் கூறினர். பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பட்டதும் அந்த பணத்தை எடுப்பதற்காக மே 15 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஏடிஎம் சென்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மே 15 ஆம் தேதி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த எனக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் என்னால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று என்கிறார். ”நான் ஒரு கும்பலால் கடத்தப்பட்டதும் காரில் கொண்டு செல்லப்பட்டதும் மூன்று வெவ்வேறு பகுதிகளில் கொடூரமாக தாக்கப்பட்டதும் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் நடந்தது” என்கிறார்.

அதிர்ஷ்டவசமாக அக்கும்பல்களிடம் இருந்து அப்பெண் தப்பியுள்ளார்.

அச்சம்பவத்தில் பெண்களே என்னை முதலில் தாக்க ஆரம்பித்தனர். அவர்கள் தங்களது பாரம்பரிய உடைகள் அணிந்திருந்தனர். அவர்கள் என்னை அடிக்கும் போது யாரோ என் தலைமுடியை வெட்ட முயன்றனர்” என்று அப்பெண் தெரிவித்தார். அப்பகுதியில் இருந்து அடுத்து இரண்டு பகுதிகளுக்கு தான் மாற்றப்பட்டதாகவும் அப்பகுதிகளில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அப்பெண் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “மலைப்பகுதிகளில் அவர்களிடம் இருந்து தப்பி வந்த போது முஸ்லீம் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் என்னை காப்பாற்றினார். பின்னால் கும்பல் துரத்தி வந்த போதும் ஆட்டோ ஓட்டுநர் என்னை காப்பாற்றினார்” என்றார்.

அடுத்த 2 நாட்கள் குகி சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது வீட்டில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டார் அந்தப் பெண். சட்டமன்ற உறுப்பினரும் அவரது மனைவியும் இது குறித்து கூறுகையில், ”இரு நாட்கள் அவரால் நடக்கக் கூட முடியவில்லை; சில நாட்கள் அவரால் உணவைக் கூட உண்ண முடியவில்லை” என்று தெரிவித்தனர்.

மே 20 ஆம் தேதி அப்பெண் அவரது குடும்பத்தினர் தங்கி இருந்த நிவாரண முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையில், மே 15 அன்று நடந்த மணிப்பூர் கலவரத்தின் போது அவர் தாக்குதலுக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக ஸ்க்ரால் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மணிப்பூர்

அடுத்தது, இம்பாலில் உள்ள நர்சிங் கல்லூரியின் பெண்கள் விடுதி ஒன்றில் புகுந்த கும்பல் அங்கு இருந்த குகி சமூக மாணவிகளை கண்டறிய அங்கிருந்த அனைத்து மாணவிகளையும் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கச் சொல்லியுள்ளது. கும்பல் விடுதியில் நுழையும் போதே அங்கிருந்த சில குகி மாணவிகள் விடுதியிலேயே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் 20 மற்றும் 19 வயதான இரண்டு மாணவிகள் அக்கும்பலிடம் அகப்பட்டுக் கொண்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண்கள் கூறுகையில். “கும்பலில் இருந்த ஒரு பெண் அந்த இரு பெண்களையும் விடுதியில் இருந்து வெளியில் இழுத்து வருமாறு கூறினார். இரு பெண்களும் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். ஒரு மாணவியின் மூன்று பற்கள் உடைந்தது. இது குறித்து அந்த மாணவிகள் கூறுகையில், நாங்கள் கடுமையாக தாக்கப்பட்டோம்” என்றார்.

அப்பெண்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர்.

அடுத்தது காங்கோபி மாவட்டத்தில் உள்ள பைனோம் பகுதியில் இரு பெண்கள் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம். மே 4 ஆம் தேதியன்று கலவரம் நடந்த போது பக்கத்து கிராமங்களில் மெய்தி கும்பல்கள் வீடுகளுக்கு தீவைக்க ஆரம்பித்ததை அறிந்து பைனோம் பகுதியிலும் மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். அக்கிராமத்தின் தலைவர் என்ற பதவியில் உள்ள ஒருவரது குடும்பமும் அவர்களது அண்டை வீட்டாரும் சிறிது கால தாமதம் செய்ததால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேர்ந்தது.

இரு குடும்பங்களும் காட்டுப்பகுதிகளில் தப்ப முயன்றன. ஆனாலும் மெய்தி கும்பல்களால் பிடிபட்டனர். பிடிபட்டதும் அப்போது 59 வயதான ஒருவரும் 19 வயதான அவரது மகனும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின் அங்கிருந்த பெண் மற்றும் 21 வயதான இளம் பெண் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இரு பெண்களும் ஆடைகளை களைந்து சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் தான் இணையத்தில் வெளியாகி நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் மணிப்பூர் பக்கம் திருப்பியது. இச்சம்பவத்தில் 21 வயதான பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.